சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார்.
ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சிஎஸ்கேவின் கேப்டனாக 12 சீசன்கள் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்த தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த பொறுப்பை ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக இல்லாமல் அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் 6ல் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டு தான் விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மே 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.