games

img

வருகிற 24 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டம்

1,400 பேர் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  

மேலும் இந்த போட்டிக்கு 22 ஆயிரம் சதுர அடியில் ஒரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் 2வது அரங்கம் என இரண்டு அரங்கத்தில் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரங்கம் 1ல் 196 டேபில் போடப்பட்டு அதில் 49 அணிகள் பங்கேற்க உள்ளன. அரங்கம் 2ல் 512 டேபில் போடப்பட்டு 49 அணிகள் அதில் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  

இதற்காக தற்போது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 எலக்ட்ரானிக் செஸ் போர்டுகள் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி குழுவினர் வரவழைத்துள்ளனர்.  

தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் வருகிற 24 ஆம் தேதி செஸ் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் 1,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒருநாள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த தீபம் இந்தியாவில் 75 நகரங்களில் 40 நாட்கள் பயணித்து போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்தடையும்.  அதன்படி, செஸ் ஒலிம்பியாட் தீபம் அந்தமானிலிருந்து விமானம் மூலம் தீபம் வருகிற 25 ஆம் தேதி கோவையை வந்தடைகிறது. அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் வழியாக வருகிற 27 ஆம் தேதி இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கை வந்தடைகிறது. அங்கு அடுத்த நாள் பிரம்மாண்டமாக தொடக்கவிழா நடைபெறுகிறது.