games

img

வறுமையை வென்ற தங்க மங்கை....

“பால், பழம், பருப்பு, இறைச்சி என்பது சிலரது வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள் அல்ல. ஆனால், பலருக்கு அதுவே ஆடம்பரப் பொருள் ஆகும்”. அதில் ஒருவர்தான் ‘மின்னல்’ தனலட்சுமி.

நேற்று வரை உலகம் அறியாத இவரது பெயர் இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படும் பெயராக மாற்றியிருக்கிறது. காரணம் இந்திய தடகள வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்திருக்கிறார் தனலட்சுமி.
தனலட்சுமி பிறப்பதற்கு முன்பு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் புதிய சாதனை படைத்தவர் கேரளத்தின் பி.டி‌.உஷா. அவரது சாதனை 23 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலம் பாட்டியா வியல் நடந்த தேசிய பெடரேஷன் கோப்பை தடகள விளையாட்டில் முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் தனலட்சுமி.

கிராமத்து மண்வாசம்...
தனலட்சுமி பிறந்தது வளர்ந்தது அனைத்தும் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமம். முதுகலை பட்டம் படித்து வரும் தனலட்சுமி அவரது குடும்பத்தின் கடைசி மகள். தந்தை சேகர் இறந்து விட, முழுப்பொறுப்பையும் அம்மா உஷா தான் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். சுமார் 7 ஆண்டு காலம் படாத பாடுபட்டு மகளை ஓட்டப்பந்தய வீராங்கனையாக மாற்றி காட்டினார்.முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் தனலட்சுமி, மற்றவர்களைப் போல் சிறுவயதில் விளையாட்டில் ஈடுபடவில்லை. பள்ளிப் படிப்பின் போது ஒன்பதாம் வகுப்பில் மாவட்ட அளவில் கோ-கோ விளையாட்டில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார். உடற்கல்வி ஆசிரியரின் ஆலோசனைப்படி தொடர்ந்து ஓட ஆரம்பித்திருக்கிறார்.

ஒவ்வொரு போட்டியின் போதும் தன்னைத் தானே தயார்படுத்திக்கொண்டு பந்தயத்தில் ஓடுவதும், பதக்கம் பெறுவதும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். முறையான பயிற்சி இல்லாமல் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றதன் சிரமம் புரிந்தது. ஆனாலும் குடும்பத்தின் வறுமை அவரை ஓட்டப்பந்தயத்தில் இருந்து வெகுதூரம் தள்ளியது. வட்டிக்கு வட்டி என்று கடன் வாங்கியது மட்டுமல்ல வீட்டில் வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் விற்று மகளுக்காக செலவழித்தார் அவரது தாய்.

உறவினர் ஒருவரின் உதவியுடன் பயிற்சியாளர் ஆறுமுகத்தின் அறிமுகம் கிடைக்க, அவரும் தனலட்சுமியின் திறமையை பார்த்து இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பிறகு தனலட்சுமியின் வாழ்க்கையில் புது வேகம் எடுத்தது. 2018 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற மாநில தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் முதன்முறையாக வெண்கலப்பதக்கம் கிடைத்தது. அடுத்தாண்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் என் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது, அதில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக அணி தங்கப் பதக்கத்தை வென்றது. அந்த அணியில் தனலட்சுமியும் ஒருவர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.தேசிய அளவில் ஹிமாதாஸ், டூட்டி சந்த் போன்றோருடன் ஓடியதில் ஈடு கொடுக்க முடியாமல் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதுவே அவருக்கு உந்து சக்தியாக அமைந்தது. 

இதற்கிடையில், கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்று விளையாட்டு உலகையும் புரட்டி எடுத்தது. தடகளப் போட்டிகள் அனைத்தும் சீர்குலைந்தன. இத்தகைய சூழ்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சகோதரியின் மரணம் மனதை பெரிய அளவில் வாட்டி வதைத்தது.இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அதிலிருந்து மீண்டு எழுந்தார், சிவகங்கையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் தனது முழு திறமையையும் நிரூபித்து தங்கப் பதக்கங்களை குவித்தது அவருக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் முதல் தங்கப்பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஓட வேண்டும், பதக்கங்கள் குவிக்க வேண்டும் என்கிற லட்சியத்தால் ஓடிக் கொண்டே இருக்கிறார்.பசியுடன் இருப்பது என்னவென்று அவருக்கு முழுமையாக தெரியும். ஆனால் தடகள வாழ்க்கையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை அவரது குடும்பமும் பயிற்சியாளரும் நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனால் தான் அவரது கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

100 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து தனக்கு சவாலாக இருந்து வந்த டூட்டி சந்த், ஹிமாதாஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பந்தய தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து தேசிய அளவில் முதல் தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முன்னாள் ஜூனியர் உலகச் சாம்பியன் ஹிமா தாஸை முந்திச் சென்று 23.26 வினாடிகளில் கடந்து  வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதித்த அவருக்கு சொந்த ஊர் மக்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.கடந்து 23 ஆண்டுகால சாதனையை பின்னுக்கு தள்ளிய தனலட்சுமி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அவரது ஓட்டமும் ஒலிம்பிக் பதக்க கனவு முயற்சியும் தொடர வாழ்த்துவோம்.

அரசு வேலை வழங்க வேண்டும்!

சர்வதேச வீராங்கனைகளின் சாதனைகளை முறியடித்து தனது கடின உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் தடகள வீராங்கனை தனலட்சுமி. சிறுவயது முதலே பல்வேறு தடைகளைத் தாண்டி தேசிய அளவில் சாதனை படைத்திருக்கும் தனலட்சுமிக்கு தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்க ரயில்வே, வருமான வரித்துறை அல்லது தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையில் அரசு வேலை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பது அவரது தாயின் கோரிக்கை மட்டுமல்ல விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் கூட.

தொகுப்பாளர் : சி. ஸ்ரீராமுலு