சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.
ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு(எஃப்.ஐ.எச்.,) வெளியிட்டுள்ளது. இந்திய ஆண்கள் அணி இதுவரை இல்லாத வகையில் 3வது தரவரிசையில் இடம் பிடித்துள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதியில் ஜப்பானிடம் தோல்வி அடைந்து, பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதில் இந்திய ஆண்கள் அணி 2296.038 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ஆஸ்திரேலியா 2642.258 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 2632.121 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. மேலும் பாகிஸ்தான் அணி 999.034 புள்ளிகளுடன் 18வது இடத்தில் உள்ளது.
எஃப்.ஐ.எச் பெண்கள் தரவரிசையில் இந்த ஆண்டு சிறந்த தரவரிசையில் இந்திய அணி 1810.321 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, அரையிறுதி வரை சென்று 4வது இடத்தை பிடித்திருந்தது. முதல் மூன்று இடங்களை நெதர்லாந்து (3015.356 புள்ளிகள்), இங்கிலாந்து (2375.787 புள்ளிகள்), அர்ஜென்டினா (2361.282 புள்ளிகள்) அணிகள் தக்கவைத்துக் கொண்டன.