games

img

உலக மகளிர் டென்னிஸ் இன்று துவக்கம் - களைகட்டியது சென்னை!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து,‌ உலக மகளிர் டென்னிஸ் தொடர் சென்னையில் முதல் முறையாக நடை பெறுகிறது. இதனை மாநில அரசுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்துகிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரைக்கும் ஒரு வார காலத்திற்கு சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, சுவீடன், கனடா, பிரான்ஸ்,போலந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 வீராங்கனைகள் ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவில் 16 வீராங்கனைகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

வண்ணமயமாக...

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக பொலிவிழந்திருந்த நுங்கம்பாக்கம் மைதானத்தில், உலகின் முன்னணி வீராங்கனைகள் பலரும் பங்கேற்பதால் தமிழ்நாடு அரசு ஐந்தரை கோடி ரூபாய் ஒதுக்கியது; இந்த நிதியை கொண்டு சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது.  மைதானம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் ரூ.3 கோடி செலவில் மின்விளக்குகள் சர்வதேச தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள், பார்வையாளர்கள், வீரர்கள், முக்கிய விருந்தினர்கள் அமரும் இருக்கைகள் அனைத்தும் மாற்றப்பட்டு வண்ணமயமாக காட்சி யளிக்கிறது.  சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மைதானம் மற்றும் அரங்குகள் அனைத்தும் புதுப்பித்து சர்வதேச தரத்தில் தயார்படுத்தி உள்ளனர். இது தவிர, ரூ.1 கோடியில் 6 டென்னிஸ் ஆடுகளங்கள் (கோர்ட் ) புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசத்தப்போவது யார்?

சென்னை ஓபன் டபிள்யூ டி.ஏ. 250 என்று பெயரிடப் பட்டுள்ள இந்தத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீராங் கனைகள் அனைவரும் சென்னையில் முகமிட்டுள்ளனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக உச்சி வெயிலிலும் ஒத்திகை மற்றும் கடுமையான பயிற்சியும் ஈடுபட்டனர். இந்த தொடருக்கான ஒற்றைப் பிரிவில் 32 வீராங்கனை களில் 24 பேர் நேரடியாகவும் நான்கு பேர் வைல்ட் காடுகள் மூலமும் தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் தகுதிச் சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான ‘டிரா’ என்று அழைக்கப்படும் போட்டிகள் செப்டம்பர் 9ஆம் தேதி 4 மணிக்கு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 11ஆம் தேதி  மாலை 4 மணி முதல் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெறு கிறது. அன்றைய தினமே பிரதான டிரா போட்டிகள் மாலை ஐந்து மணிக்கு மூன்று ஆடுகளத்தில் நடைபெறுகிறது.  சென்னை ஓபன் போட்டியில் அமெரிக்காவின் ஆலிசன் ரிஸ்கே முதல் நிலை வீராங்கனையாக விளையாடுகிறார். உலக டென்னிஸ் தர வரிசையில் 17 வது இடத்தில் இருக்கும்  பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா கடைசி நேரத்தில் விலகியதால் அந்த வாய்ப்பு ஆலிசனுக்கு கிடைத்துள்ளது. இவர் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களாக ஜொலித்த விஜய் அமிர்தராஜ் சகோதரர் ஆனந்த் அமிர்த ராஜ் மகன் ஸ்டீபனின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடிக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் 22 வயதாகும் வர்வரா ஆண்டிரியனாவா அமெரிக்கா சார்பில் விளையா டினாலும் இரண்டாவது இடத்தில் இருப்பதால் கடும் சவால் காத்திருக்கிறது.

உலக டென்னிஸ் அரங்கில் கொடி கட்டி பறந்த செரினா வில்லியம்சை கிராண்ட்ஸ்லாம் தொடரில் வீழ்த்தியவர் சீனா வீராங்கனை வாங் கியாங். ஆசிய டென்னிஸ் தொடரில் இரண்டு முறை தங்கப்பதக்கம் தட்டி வந்தவர்.‌ டபிள்யூடிஏ தொடரிலும் ஜூனியர் போட்டிகளிலும் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் கால் இறுதிவரை முன்னேறிய உலகத் தரவரிசையில் 15 வது இடத்தை பிடித்தவர்.  இவர் சென்னை ஓபன் தொடரில் பங்கேற்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. கடந்தாண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பட்டத்தை  வென்று உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ்லீ பார்ட்டியை வீழ்த்தியவரும் விம்பிள்டன் தொடரில் எலீனாவை வென்ற வருமான  30 வயதாகும் போலாந்தின் மெக்தா லினெட்; இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் இம்முறை விம்பிள்டன் ஒற்றையர் போட்டியின் அரை இறுதி வரை முன்னேறியவரும் 35 வயதை கடந்தாலும் அனைத்து வீரர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துவரும் ஜெர்மனியின் தாத்ஜனா மரியாடே.  அடிலைட் இன்டர்நேஷனல் போட்டியில் ஐந்து முக்கிய வெற்றிகளை சுவீடன் நாட்டைச் சேர்ந்த 27 வயதாகும் ரிபெக்கா பீட்டர்சன். இவர்களுடன் 17 வயது ஆகும் லின்டா புருவிர்டோவா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

தணிந்தது தாகம்!

காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் கலந்து கொள்ளாத இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா, சென்னை ஓபனில் கலந்து கொள்வதற்கும் முழுமை யாக உடற்பகுதி பெறவில்லை. இருந்தாலும் அவரது டென்னிஸ் வாழ்க்கை பயணத்தை கவுரவிக்கும் வகையில் வகையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டென்னிஸ் அமைப்பாளர்களை தேர்வு செய்யும் ‘வைல்டு  கார்டு’ அடிப்படையில் இந்திய அணியின்  நட்சத்திர வீராங்கனையும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் தங்கமும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கமும் வென்ற வருமான 29 வயதான அங்கீதா ரெய்னா நேரடி தகுதி பெற்று இருக்கிறார். இதே போல் தில்லியைச் சேர்ந்த 24 வயதாகும் கர்மன் கவுர் தண்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் நம்பர் ஒன் இரட்டையர் ஜோடியான ருதுஜா போசலே, ரியா பாட்டியா ஆகியோரும் வைல்டு கார்டு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுடன் உள்ளூர் வீராங்கனைகளான சாய் சாமர்த்தி, லட்சுமி பிரபா அருண்குமார் ஆகியோர்  தகுதிச்  சுற்றில் வெற்றி பெற்று பிரதான போட்டிக்கு தகுதி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.‌ இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் இந்த தொடரில் உள்நாட்டு வீரர்கள் இல்லை என்ற ஏக்கமும் தற்போது தணிந்திருக்கிறது.

இன்று துவக்க விழா!

சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரைக்கும் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் தினசரி மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு வரை மின்னொளியில் நடைபெறுகிறது.  இதில், ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும்  வீராங்கனைக்கு கோப்பையுடன் 26.50 லட்சம் ரூபாய் முதல் பரிசும் இரண்டாவது இடத்திற்கு 15.77 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.9.58 லட்சமும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ 5.38 லட்சமும் பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கப் படுகிறது. இதனால், பட்டத்தை வென்று அசத்தப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியிருக்கிறது.

- ஸ்ரீ.ராமுலு 

;