அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதியில் சபலென்கா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, அதிரடிக்கு பெயர் பெற்ற உள்ளூர் வீராங்கனையான கீஸை (அமெரிக்கா) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத் திய கீஸ் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட சபலென்கா அதி ரடி ஆட்டத்தை கையிலெடுத்து 7-6 (7-1), 7-6 (10-5) என்ற செட் கணக்கில் அடுத்த 2 செட்களை கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு அரை யிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் முச்சோவை 6-4, 7-5 செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்காவின் கவுப் இறுதிக்கு முன்னேறினார். சபலென்கா (பெலாரஸ்) - கவுப் (அமெரிக்கா) மோதும் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.
பலோன் டி ‘ஓர் விருது பரிந்துரையில் மெஸ்ஸி
கால்பந்து உலகின் மிக முக்கிய மான உயரிய விருதாக இருப்பது பலோன் டி ‘ஓர் விருது ஆகும். 1956ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கப் பட்டு வரும் பலோன் டி ‘ஓர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான பலோன் டி ‘ஓர் விருதுக்கு கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை வாங்கி தந்த அர்ஜெண்டினா அணி கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சாதனை
நடப்பாண்டுக்கான பரிந்துரை மூலம் பலோன் டி ‘ஓர் விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள் ளார். மேலும் அதிகமுறை விருதை வென்ற வர் என்ற சாதனையும் மெஸ்ஸியிடம்தான் உள்ளது. மெஸ்ஸி இதுவரை 7 முறை இந்த விருதை வென்றுள்ளார். மெஸ்ஸியுடன் நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலந்த்தும் (மான்செஸ்டர் யுனைடெட்) பரிந்துரை பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதனை
மெஸ்ஸியை போல கால்பந்து உலகின் மற்றொரு நட்சத்திர வீரரான போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டி யானோ ரொனால்டோ நடப்பாண்டுக் கான பலோன் டி ‘ஓர் விருது பரிந்துரை பட்டியலில் இல்லை. 20 வருடங்களுக்கு பிறகு ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாதது இதுவே முதல் முறையாகும். இதனால் ரொனால்டோ ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். ரொனால்டோ இதுவரை 5 முறை இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிந்துகொள்வோம்...
இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பின்லாந்து
உலகில் உள்ள 195 நாடுகளில் 150 நாடுகளை விளையாட்டு உலகம் மூலம் எளிதாக அடையாளம் காணும் நிலையில், சின்ன சின்ன தீவு நாடுகள் அடையாள பிரிவில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் உலகின் நன்கு அறியப்பட்ட ஒரு நாடு விளையாட்டு உலகில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அந்நாட்டின் பெயர் பின்லாந்து ஆகும். கல்வியில் முதன்மையாக உள்ள நாடான பின்லாந்து விளையாட்டு ஆர்வத்தில் மிக குறைவாகதான் உள்ளது. பெயரளவில் தடகளம், ஐஸ் ஹாக்கி, கால்பந்து, கார் பந்தயம், அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து, குதிரை பந்தயம் ஆகியவற்றில் அந்நாட்டுக்காரர்கள் விளையாடுவார்கள். ஆனால் மற்ற நாடுகளை போல பெரியளவில் விளையாட்டில் சாதிப்பது குறித்து ஆர்வமில்லாமல் இருப்பார்கள். ஒலிம்பிக் தொடர்களில் பின்லாந்து கொடியை பார்க்கலாம். மற்ற நாட்களில் பின்லாந்து கொடியை காண்பது அரிதான சம்பவம் ஆகும். கல்வியில் கலக்கும் பின்லாந்துகாரர்கள் இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், மாற்று ஆராய்ச்சி போன்றவற்றில் உலகளவில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.