இன்று டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்கம்
வெறும் 5 மாதங்களில் தயாரான கிரிக்கெட் மைதானங்கள்
அமெரிக்காவில் கால்பந்து, பேஸ்பால், கூடைப்பந்து, ரக்பி, அமெரிக்கன் கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் மட்டுமே பிரபலம் ஆகும். ஆனால் உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட் விளையாட்டு பற்றி அமெரிக்காவில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் நோக்கத்தில் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் (ACE) நிறுவனம் இணைந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போன்று அமெரிக்காவிலும் மேஜர் லீக் என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரை மேற்கு இந்தியத் தீவுகளுடன் இணைந்து நடத்த விருப்பம் தெரிவித்து அதற்கான ஒப்புதலை பெற்ற நிலையில், மேற்கு இந்தியத் தீவுகளை தவிர்த்து கிரிக்கெட் பின்புலம் இல்லாமல் முதன்முறையாக அமெரிக்க கண்டங்களில் (வட, தென்) உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது அமெரிக்கா.
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடருக்காக அமெரிக்கா புளோரிடா - 25,000 பேர் அமரலாம் (4 ஆட்டங்கள்), நியூயார்க் - 34,000 பேர் அமரலாம் (8 ஆட்டங்கள்), டெக்சாஸ் - 15,000 பேர் அமரலாம் (4 ஆட்டங்கள்) என 3 மைதானங்களை மிக குறுகிய காலத்தில் பிரம்மாண்ட செலவுடன் கட்டி அசத்தியுள்ளது. இதில் நியூயார்க் மைதானம் வெறும் 5 மாதங்களில் கட்டப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் உலகில் இந்த சம்பவம் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 மாதங்களில் மைதானங்கள் உருவாக்கப்படுவது சாதாரண செயல் அல்ல
கிரிக்கெட் மைதானம் அமைக்க காற்றின் திசைவேகம், வெள்ள மேலாண்மை, நிலச்சரிவு மேலாண்மை, மண்ணின் பலம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவே மாத கணக்கு ஆகும். அதன்பிறகு ஒவ்வொரு பணியாக மேற்கொண்டு கடைசியாக பிட்ச் பகுதி அமைக்க வேண்டும். பிட்ச் பகுதி கிரிக்கெட் மைதானத்தின் மூளை, நுரையீரல், இதயம் என்ற நிலையில், பிட்ச் பகுதி அமைக்க பல்வேறு ஆராய்ச்சி மேற்கொண்டு மாதக்கணக்கில் பராமரிப்பு சரிப்பார்த்து அதன்பின்னரே கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்படும். தோராயமாக கிரிக்கெட் மைதானங்கள் புதிதாக உருவாக்க ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அமெரிக்கா வெறும் 5 மாதங்களில் ஒரு மைதானத்தை (நியூயார்க்) முழுமையாகவும், 2 மைதானங்களை 50% அளவிலும் குறுகிய காலத்தில் 3 மைதானங்களை உருவாக்கி வரலாறு படைத்துள்ளது அமெரிக்கா.
துவக்க ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா மோதல்
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெ ரிக்கா நாடுகளில் கூட்டாக ஞாயிறன்று காலை (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் மொத்தம் 10 மைதானங்களில் (மேற்கு இந்தியத் தீவுகள் 7, அமெரிக்கா 3) நடைபெறு கிறது. லீக் ஆட்டம், சூப்பர் 8,அரையிறுதி, இறுதி என்ற முறையில் நடைபெறும் இந்த டி-20 உலகக்கோப்பை தொடரின் துவக்க ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டங்கள்
அமெரிக்கா - கனடா
இடம் : டெக்ஸாஸ், அமெரிக்கா
நேரம் : காலை 6:00 மணி
மேற்கு இந்தியத் தீவுகள்- பப்புவா நியூ கினியா
இடம் : கயானா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)