games

img

விளையாட்டு...

இந்திய மகளிர் கால்பந்து அணியை சர்வதேச தரத்திற்கு மாற்றப் போராடும் தமிழ்நாடு வீராங்கனை இந்துமதி

சமீபத்தில் 27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில்  ஹரியானா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசியாக 2018இல் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

5 ஆண்டுகள் போராட்டம்

தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீராங்கனையும், இந்திய பெண்கள் கால்பந்து அணியின் துணை கேப்டனும், தமிழ்நாடு காவல்துறையின் துணை ஆய்வாளருமான இந்துமதி கதிரேசனின் அபார ஆட்டத்தின் மூலம்தான் தமிழ்நாடு அணி தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 2018ஆம் ஆண்டிலும்  இந்துமதியின் அசத்தலான வியூகத்தால்தான் தமிழ்நாடு அணி முதன்முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் ராணி

இந்துமதி கால்பந்து களத்திலும் சரி, காவல்துறை வாழ்க்கையிலும் சரி மிகுந்த போராட்டத்துடனேயே எதிர்நீச்சலுடன் ஒவ்வொரு நகர்வாக முன்னேறிக் கொண்டு வருகிறார். கொரோனா தொற்றுநோய்களின் போது இந்துமதி கதிரேசன் போலீஸ் சீருடையில் சிறிதளவு கூட பயமில்லாமல் சென்னையில் அனைத்து பணிகளையும் பயமில்லாமல் செய்தார். அதே போல தேசிய அணி தேர்வின் பொழுதும், ஆடும் லெவன் அணி தேர்வின் பொழுதும் ஒவ்வொரு முறையும் தேசிய கால்பந்து நிர்வாகத்திடம் கடும் மோதல் போக்குக்கு இடையே, போராட்டத்துடன் இந்திய அணியில் விளையாடி அசத்தி வருகிறார். பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும் ஆடுகளத்தில் தனது அசுர வேக ஆட்டத்தையும் குறைக்காமல் விளையாடி வருகிறார். இடையில் கோகுலம் எப்சி என்ற கேரளா கிளப் அணியிலும் நட்சத்திர வீராங்கனையாக விளையாடி வரும் இந்துமதி, சக இந்திய வீராங்கனைகளைப் போல வெளிநாட்டு கிளப் அணிக்காக விளையாடி இந்திய பெண்கள் கால்பந்து அணியை சர்வதேச தரத்தில் மாற்ற தனி கணக்கையும் துவங்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக வெஸ்டர்ன் யுனைடெட் எப்சி (மெல்போர்ன் - ஆஸ்திரேலியா), அடிலெய்டு யுனைடெட் எப்சி (ஆஸ்திரேலிய), பெர்த் எஸ்சி (ஆஸ்திரேலியா),  இசட்என்கே டினாமோ ஜாக்ரெப் (ஆஸ்திரேலியா), மார்பெல்லா எப்சி (ஸ்பெயின்)  ஆகியவற்றின் தலைமைப் பயிற்சியாளர்கள் நடப்பு வாரத்தில் கொல்கத்தாவில் வீராங்கனைகளுக்கான சோதனைகளை நடத்த உள்ளனர். இந்த பயிற்சியில் இந்துமதியின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் மனம்தளராமல் பேசியுள்ள இந்துமதி,”எனது வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய அடுத்த விஷயம், வெளிநாட்டில் ஒரு கிளப்பில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பைக் கண்டுபிடிப்பதாகும், அதை என்னால் செய்ய முடியும்,” என்று கூறியுள்ளார்.

இது எப்போது கிடைக்கும்...

2018இல் தமிழ்நாடு மகளிர் அணி மாநிலத்தின் முதல்  சீனியர் தேசிய பட்டத்தைவென்றது. அப்பொழுது சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பிடித்த இந்துமதி உள்ளிட்ட அனைத்து வீராங்கனைகளுக்கும் தமிழ்நாடு மாநில அரசால் ‘உயர் ஊக்க  வெகுமதி’ வழங்கப்படும் என்று உறுதி யளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை வீராங்கனைகள் எதையும் பெறவில்லை. தற்போது இரண்டாவது முறையாக பட்டம் வென்று இருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க முடியும்.

ரசிகர்கள் ஆதரவு... ஸ்ட்ரீமிங் ஆதரவு வேண்டும்...

“நாங்கள் கால்பந்தில் வளர்ந்து வருகிறோம். ஆனால் ஆண்கள் அணிக்கு கிடைக்கும் ஊக்கம் எங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. நாங்கள் விளையாடுவதைப் பார்க்க மக்கள் பெரும்பாலும் மைதானத்திற்கு வருவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மகளிர் அணிக்கான சர்வதேச நட்புறவுப் போட்டியின் பொழுது கிட்டத்தட்ட காலியான மைதானமே இருந்தது. இதுபோக சில விளையாட்டுகளை நாங்கள் பார்க்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் வியூகம் வகுக்க ஸ்ட்ரீம் செய்யப்படவில்லை, மேலும் சில சமயங்களில் எங்களால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. தேசிய அளவில், விளையாட்டுகள் நேரலையில் இருப்பது நல்ல விஷயம். இந்த வசதியும் மகளிர் கால்பந்து அணிக்கு இன்னும் கிடைக்கவில்லை” என இந்துமதி ஸ்போர்ட்ஸ் ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.



 

;