games

img

ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள் மாற்றம்

மும்பை : மார்க் பவுச்சர் 

மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே (இலங்கை முன்னாள் கேப்டன்) நீக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்,  அதிரடி பேட்டிங் என 15 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீர ராகவும், கிரிக்கெட் உலகின் அபாயகர மான விக்கெட் கீப்பர் என்ற சிறப்பு அந்தஸ்து கொண்ட மார்க் பவுச்சர் 2019-ஆம் ஆண்டு தான் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், வெள்ளியன்று மும்பை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் : டிரெவர் பெய்லிஸ்

பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய அணி முன்னாள் வீரர் கும்ப்ளே நீக்கப்பட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான டிரெவர் பெய்லிஸ் (59) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய ஐபிஎல் அணிகளுக்கும் பெய்லிஸ் பயிற்சி யாளராக பணியாற்றிய அனுபவம்  கொண்டவர். சர்வதேச போட்டிகளில்  விளையாடாமல் இலங்கை, இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக திறம்பட பணியாற்றிய டிரெவர் பெய்லிஸ் பயிற்சியால் தான் 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் மார்க் பவுச்சர்

தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தலைமையில்தான் தென் ஆப்பிரிக்கா அணி அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி-20 தொடருக்கு வீரர்களை அறிவித்து தயார் நிலையில் உள்ளது. திடீரென தான் 15 வருடங்கள் ஆடி சம்பளம் பெற்ற, தன்னை வளர்த்தெடுத்த அணி, நாட்டின் தேசியம் என எதையும் கண்டுக்கொள்ளாமல் பணம் என்ற ஒரே காரணத்திற்காக பயிற்சியாளர் பதவியை விட்டு வெளியேறியுள்ளார். புதிய பயிற்சியாளர் தேர்வு செய்து, பயிற்சியாளர் வீரர்களுடன் பழகி, பயிற்சி ஆலோசனை கூறவே ஏறக்குறைய 6 மாத காலம் ஆகும். ஆனால் உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தான் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா வீரர்கள், அணி நிர்வாகம், ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பை டி-20 : ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

கிரேக் எர்வின் (கேப்டன்), பர்ல் ரியான், சீன் வில்லியம்ஸ், ரெஜிஸ் சகப்வா, சதாரா தென்டை, எவன்ஸ் பிராட்லி, ஜாங்வே லூக், மடாண்டேகிளைவ், மாதேவ்ரே வெஸ்லி, மசகட்சா வெலிங்டன், முனியோங்கா டோனி, முசரபானி பிளெசிங், ரிச்சர்ட், சிக்கந்தர் ரசா, மில்டன் ஷும்பா,  மாற்று வீரர்கள் : தனகா சிவாங்கா, இன்னோசண்ட் கயா, கெவின் கசுசா, தடிவானாஷே மருமணி, விக்டர் நியாச்சி

 

;