facebook-round

img

மீண்டும், மீண்டும் பாசிசம் தோற்கிற இடம் இதுதான் - மாதவராஜ்

நேற்று ஜாமாலிய மாணவர்களை நோக்கி பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் காவல்துறையினர் வேடிக்கை பார்க்க, ராம்பக்த் கோபால் என்பவன் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்.

சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் ஒரு இளைஞன், “டெல்லியில் போராடும் ஜே.என்.யூ தேச விரோதிகளை கொல்வதற்கு என்னிடம் துப்பாக்கி தந்தால் நான் சுடுவேன்” என மிகச் சாதாரணமாக காமிராவிடம் சொல்வதை டிவீட்டரில் காண நேர்ந்தது.

இவர்களைத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கி வளர்த்து வருகின்றன. பாசிசத்தின் செயல்பாடுகளில் இது பிரதானமானது.

பாசிசம் எப்போதும் மனித மனங்களில் எதிரிகளை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டே இருக்கிறது. அடையாளம், நிறம், மொழி, மதம், ஜாதி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி மனிதர்களை ஒருவரிடமிருந்து இன்னொருவரை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. சதாநேரமும் பகைமையை, வெறுப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து விளைந்தவர்களே இப்படி பயங்கரவாதிகளாக, கொலைகாரர்களாக வந்து நிற்கிறார்கள்.

தாங்கள் அதிகாரத்துக்கு வந்ததும், இத்தனை காலமாய் உருவேற்றி வைத்திருக்கும் இந்த பகைமையை தீர்ப்பதற்கான நாள் வந்து விட்டதாய், அவர்கள் குதியாட்டம் போடுகிறார்கள். குஜராத்தில் கொடூரமாய் கொலை செய்தவர்கள் அதற்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். பசுவை முன்னிறுத்தி வெறியாட்டம் ஆடியவர்கள் சகஜமாய் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். மேடைகளில் ’‘கொல்வோம், தலையை எடுப்போம்’ என பகிரங்கமாகப் பேசிவிட்டு அவர்களின் தலைவர்கள் மாலை மரியாதையுடன் பவனி வருகிறார்கள். ஊடகங்கள் அவர்களை பயங்கரவாதிகளாய் சித்தரிப்பதில்லை. ’எது வேண்டுமானாலும் செய்யலாம்’ என்னும் உன்மத்தம் அவர்கள் மீது படிகிறது. வெறியாட்டம் போடுகிறார்கள். இது ஒரு புறம்.
இப்படி வெறியாட்டம் போடும் தங்களுக்கு எதிராக மனிதர்கள் சிந்திப்பதை, பேசுவதை, செயல்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. பைத்தியம் பிடித்தது போல் கிடந்து அரற்றுவார்கள். தங்களுக்கு எதிராக மக்கள் திரண்டால் மூர்க்கத்தனமாக பாய்வார்கள். அதிலும் மாணவர்கள் என்றால் கொடூரமாய் தாக்குவார்கள். அதுதான் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. ஜமாலியா, ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களைப் பார்த்து மட்டுமல்ல. பெங்களூரில் ஒரு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நடித்த ஒரு நாடகத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை விசாரித்து பயமுறுத்தும் அளவுக்கு காவல்துறை தரம் இறங்கி போயிருக்கிறது. உள்ளுக்குள் பயந்து தொடை நடுங்கிப் போயிருக்கிறது பாசிசம். இது இன்னொரு புறம்.
மனிதர்களை மிரட்டி, அடக்கி, அடிபணியச்செய்ய மட்டுமே பாசிசத்திற்கு தெரியும். அன்பினால், அறிவினால் மனிதர்களிடம் நெருக்கம் கொள்ள அதற்கு ஒரு போதும் வராது. மீண்டும், மீண்டும் பாசிசம் தோற்கிற இடம் இதுதான். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிற இடமும் இதுதான்.

-Mathavaraj

;