அதுவரையில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளையும் அழித்து ஜெர்மனியின் ஒரே கட்சியாக நாஜிக் கட்சியும், ஒரே தலைவனாக ஹிட்லரும் தலையெடுத்த பிறகே ஜெர்மனியில் பாசிசம் தலை விரித்தாடியது.
ஹிட்லரின் நாஜிக்கட்சி 1920ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர் German National Socialistic Workers Party. அப்போது அது மிகச் சிறிய கட்சி. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலக்கட்டம் அது. ஜெர்மனி பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியை அடைந்து கொண்டு இருந்தது. ஹிட்லர் தனது பேச்சுத் திறமையால், கடந்த கால மகிமைகளையும், ஆரிய இனத்தின் பெருமைகளையும் விவரித்து எல்லாவற்றையும் ஜெர்மனி தேசம் இழந்து நிற்பதாகவும், அதிகாரத்தில் இருக்கும் யூதர்களும், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுமே இதற்கு பொறுப்பு என்றும், இழந்தவற்றை மீட்க நாம் தயாராக வேண்டும் என்றும் கிளர்ச்சியுறும் விதமாக பேசி கட்சியை வளர்த்து வந்தான். ஜெர்மனி மீண்டும் வலிமையான தேசமாக வேண்டும் என்றும் அதற்கு வலிமையான கட்சியும், வலிமையான தலைமையும் அவசியம் என்றும் திரும்பத் திரும்ப மக்களிடையே பிரச்சாரம் செய்தான். 1928 நடந்த தேர்தலில் 8 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றது. உலகம் முழுவதும் காணப்பட்ட பொருளாதார மந்தம், ஜெர்மனியில் வறுமையையும், வேலையின்மையையும் அதிகரித்தது. அந்த மோசமான நிலைமைக்கு காரணம் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியே காரணம் என பழி சுமத்தி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவோம் என ஹிட்லர் முழக்கமிட்டான்.
1930ல் நடந்த தேர்தலில் நாஜிக்கட்சி. 64 லட்சம் வாக்குகள் பெற்றது. 1932 நவம்பர் தேர்தலில் 11 சதவீதம் வாக்குகளை அக்கட்சி பெற்றது. அந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாஜிக்கட்சியோடு சேர்ந்து ஆட்சியமைக்க கன்சர்வேடிவ் கட்சிகள் முனைந்தன. ஹிட்லருக்கு சான்ஸ்லர் பொறுப்பும் ஒன்றிரண்டு இலாகாக்களையும் கொடுத்துவிட்டு, தாங்கள் மெஜாரிட்டியாக இருந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அவை திட்டமிட்டன. தங்கள் நலனுக்கு ஹிட்லரை பயன்படுத்திக்கொள்வது என்பதே அவர்களது நோக்கம். ஹிட்லரையும், நாஜிக்கட்சியையும் குறைத்து மதிப்பிட்ட அந்த சிந்தனைதான் பேரழிவுக்கான விதையானது.
1933 ஜனவரியில் ஹிட்லர் ஜெர்மனியின் சான்ஸ்லராக அந்நாட்டு அதிபரால் அறிவிக்கப்பட்டான். நாஜிக்கட்சிக்கு இரண்டு இலாகாக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை முக்கியமான இலாகாக்களாக ஹிட்லர் தேர்ந்தெடுத்துக் கொண்டான். காவல்துறைக்கு பொறுப்பாக இருந்த நாஜிக்கட்சியின் கோரிங் ஹர்மன் இருந்தான். ’இதுவரை அமைந்த அரசுகளைப் போல இதுவும் வழக்கமான ஒன்று, ரொம்ப நாளைக்குத் தாங்காது’ என்றே மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுபோல் மார்ச் 5 ம் தேதி மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 27ம் நாள் ஜெர்மனி பாராளுமன்றத்தின் உச்சியில் தீப்பிடித்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக வந்த கோரிங் “கம்யூனிஸ்டுகளின் புரட்சியின் தொடக்கம்தான் இது. அவர்கள் நம்மை தாக்கப் போகிறார்கள்” என அறிவித்தான். ஹிட்லரோ, “யாரிடமும் இரக்கம் காட்டாதீர்கள். நம் வழியில் குறுக்கே வரும் எவரையும் அழியுங்கள்’ என உத்தரவிட்டான்.
அடுத்தநாளே ஜெர்மனியில் அதிபரை வைத்து அவசரநிலைப் பிரகடனம் போன்ற Law for the Protection of People and State-ஐ பிறப்பித்தான் ஹிட்லர். மக்களின் உரிமைகள், கருத்துரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. எந்த முறையுமின்றி வீடுகளுக்குள் காவலர்கள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அரசியல் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு நடுவே, மார்ச் 5 ம்தேதி தேர்தல் நடந்தது. எங்கும் நாஜிக்களின் கொடிகளும், போஸ்டர்களும் மட்டுமே காண முடிந்தது. நாஜிக்களால் 43.9 சதவீத ஓட்டுக்களைப் பெற முடிந்தது. அப்போதும் இடதுசாரி கட்சிகள் 30 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருந்தன. ஹிட்லர் கம்யூனிஸ்டு கட்சிகளை தடை செய்து உத்தரவு பிறப்பித்தான். மார்ச் 15ம் தேதிக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்காகத்தான் முதன் முதலில் ஜெர்மனியில் வதை முகாம்கள் அமைக்கப்பட்டன.
மார்ச் 23ம் தேதி பாராளுமன்றத்தில், அதிபர் தலையீடு இல்லாமல் சட்டங்களை ஹிட்லரே பிறப்பிக்கும் ‘enabling act’-ஐ கொண்டு வந்தான். பாராளுமன்றத்தை சுற்றி இராணுவமும், காவலர்களும் நிற்க, “சண்டையா, சமாதானமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என ஹிட்லர் மிரட்டினான். Enabling Actற்கு ஆதரவாக 444 ஓட்டுகளும், எதிராக 94 ஓட்டுகளும் இருந்தன. ஹிட்லர் பெரும் அதிகாரம் படைத்தவனான். அதன் பிறகு பாராளுமன்றம் அர்த்தமிழந்து, தேவையும் அற்றுப் போனது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது. முக்கிய தேசீயக் கட்சிகளை ஹிட்லர் தனது நாஜிக் கட்சியோடு இணைத்துக் கொண்டான். கத்தோலிக் கட்சி தானே தன்னை இல்லாமல் ஆக்கிக் கொண்டது. 1933 ஜூலையில் Law Against the Formation of New Parties என்னும் சட்டத்தை ஹிட்லர் கொண்டு வந்தான். அதன் பிறகு எந்த புதிய கட்சிகளையும் ஆரம்பிக்க முடியாமல் போனது. ஜெர்மனியில் நாஜிக் கட்சி மட்டுமே ஒரே கட்சியானது. ஹிட்லர் மட்டுமே ஒரே தலைவன் ஆனான்.
பாசிசம் அறிவோம்
வரலாற்றிலிருந்து பாடம் கற்போம்