ஒன்றைப் புரிந்து கொள்வீர் !
நான்சொல்லியாக வேண்டும்
இனியும் தாமதிக்க முடியாது !
எப்படிச் சொல்வது ?
கடிதம் எழுதிவிடுவோமா ?
முடியாது
தேசத் துரோகக் குற்றமாகிவிடும் !
முகநூலில் ,டுவிட்டரில் பதிவிடலாமோ ?
சாத்தியமில்லை
அவதூறு வழக்குகள் பாயும்!
அரங்கத்துக்குள் உரையாற்றலாமே?
வாய்ப்பில்லை
கதவு மூடப்பட்டுவிடும்!
பொதுமேடையில் முழங்கலாமோ?
இயலாது
அனுமதி மறுக்கப்படும் .
சரி ! சரி ! எழுத்தித் தொலைக்கலாமோ?
எங்கே இருக்கிறீர் ..
வழக்குகள் பாயும் !
முணுமுணுத்தேனும் எதிர்ப்பைக் காட்டலாமோ?
ம்..ம்..கூடவேகூடாது
ரகசியச் சதியென கைதாவீர்!
என்னதான் செய்வது ?
எப்படித்தான் சொல்வது ?
வழிகண்டாக வேண்டுமே !
ஒன்றைப் புரிந்து கொள்வீர்!
ஆண்டைகளின் அனுமதி பெற்று
அடிமைகள் ஆயுதம் ஏந்த முடியாது !
எல்லா கதவையும் அடைத்தவர்களுக்கு
வரலாற்றின் அரிச்சுவடியும் தெரியாது
அடக்குமுறையின் எதிர்வினையும் அறியார்!
கதவை மட்டுமல்ல கோட்டைச் சுவரையும்
உடைத்தெறியும் எம் வெஞ்சினம்
ஸ்பாட்டகஸைக் கேட்டுப் பாருங்கள் !
பாஸ்டல் சிறைச் சுவரைக் கேளுங்கள்!
வியட்நாமில் பின்னங்கால் பிடரியில் இடிபட
ஓடிய ஏகாதிபத்தியத்தைக் கேளுங்கள்
கருப்பர்களின் தசைமுறுக்கைப் பாருங்கள் !
விடுதலைப் போர்களின் வீரத்தழும்புகளை
தடவித் தடவி உரிமையின் வீரியத்தை பாருங்கள்
எல்லாவற்றிலும் கொடிய அடக்குமுறையான
சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய்
மாற்றங்களைச் சாதித்த எம் சகோதரரைக் கேளுங்கள் !
உங்கள் அடக்குமுறை சாசுவதம் அல்ல
மீறமுடியாத தடையும் ஏதுமில்லை
எங்களின் வெற்றி எட்டிவிடும் தூரம்தான்….
ஒன்றைப் புரிந்து கொள்வீர்!
ஆண்டைகளின் அனுமதி பெற்றா
அடிமைகள் ஆயுதம் ஏந்துவர் ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
6/10/2019.