facebook-round

img

சமூக ஊடக சாம்பியன்கள்

சுமார் ஒருமாதம் முன்பு நண்பர் ஒருவர் இன்பாக்சில் ஒரு படத்தைக் காட்டி, இது குறித்து எழுதுங்கள் என்று கேட்டார். அப்போதுதான் இப்படியொரு விஷயமே எனக்குத் தெரிய வந்தது. ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ இதைப்பற்றிய எந்தச் செய்தியும் / விவாதமும் பார்க்கவில்லை. இப்போது இதைப்பற்றிப் பார்ப்போம்.
*
பாஜக அரசை விமர்சனம் செய்தால், அது ஒரு மதத்தை விமர்சனம் செய்வதாக திரித்து வெறுப்பு அரசியல் செய்வோர் ஒருபக்கம். அரசின் தவறுகளை விமர்சனம் செய்தால் தேசத்துரோகம் என்று சொல்லுவோர் ஒருபக்கம். ஆர்டிஐ என்னும் ஆயுதத்தை நீர்க்கச் செய்வதற்கு ஒரு திருத்தம் வரப்போகிறது. தடை செய்யப்படாத புத்தகத்தை வீட்டில் வைத்திருந்தால்கூட, இந்தப் புத்தகம் ஏன் வீட்டில் வைத்திருக்கிறாய் என்று நீதிமன்றமே கேட்கும் காலம் இது. இனி உண்மைத் தகவல்கள் யாருக்கும் கிடைக்காது. ஒட்டுமொத்த ஊடகங்களும் ‘காலிலேயே விழுந்து விட்டானய்யா’ என்ற நிலையில் உள்ளன. என்டிடிவி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்கள் நியாயத்தின் குரலை எடுத்துச் சொல்லும்போது, அவர்கள் மீதும் பாய்கிறது சிபிஐ. அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் ஹிண்டு போன்ற இதழ்களுக்கு விளம்பரங்கள் மறுக்கப்பட்டு, பத்திரிகை தொடர்வதே சிக்கலாகியுள்ள நிலைமை இன்று.

மைய அரசின் ஒரு துறையின்கீழ் 200 பேர் பணியாற்றும் ஒரு அலுவலகம், எந்தெந்த ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்கின்றன, எந்தெந்த ஊடகங்கள் பிரதமரை எந்த அளவுக்கு புகழந்து காட்டுகின்றன என்று கணக்கெடுப்பதாகவும், விமர்சனம் செய்யும் ஊடகங்களுக்கு மிரட்டலும், அரசின் சாதனைகளை (!) அல்லது பிரதமரை குறைவாகக் காட்டும் ஊடகங்களுக்கு ‘அறிவுரையும்’ தரப்படுகிற செய்திகளும் வெளிவந்துள்ளன.

இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் தவறான செயல்களை விமர்சிப்பதற்கான வெளி - ஸ்பேஸ் - குறைந்தும் மறைந்தும் வருகின்றது. இப்போதைக்கு இருப்பது வலைதளங்களும் சமூக ஊடகங்களும்தான். சமூக ஊடகங்களிலும் 10 உண்மைகள் பகிரப்படுவதற்குள் 100 பொய்கள் சுற்றி வந்து விடுகின்றன.

இந்தப் பின்னணியை நினைவில் நிறுத்திக்கொண்டு அடுத்த விஷயத்துக்குப் போவோம்.

மைய அரசின் சார்பில் ஒரு சுற்றறிக்கை உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள விஷயத்தின் சாரம் என்ன?

உயர்கல்வி நிறுவனங்களை பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று இணைத்தும், மைய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்துடன் (மைய கல்வி அமைச்சகத்துடன்) இணைத்தும், கல்வி நிறுவனங்கள் தமது சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்திலும் ஆசிரியப் புலத்திலிருந்து அல்லது இதர துறையிலிருந்து ஒருவர் சமூக ஊடக சாம்பியன் (சோஷியல் மீடியா சாம்பியன் - எஸ்எம்சி) என நியமிக்கப்பட வேண்டும். அவர், தனது நிறுவனம் அல்லது தனது கல்லூரி மாணவர்கள் செய்த நற்செயல்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காக அவர் செய்ய வேண்டியவை —
*கல்வி நிறுவனத்தின் சார்பில் பேஸ்புக்/ட்விட்டர்/இன்ஸ்டாகிராம் கணக்கினை இயக்க வேண்டும். (இதுவரை இவற்றில் உறுப்பினராக இல்லை என்றால் புதிதாகத் திறக்க வேண்டும்.)
*அந்தக் கணக்கை இதர உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு (எச்ஆர்டி) அமைச்சக சமூக ஊடகக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
* அந்தக் கல்வி நிறுவனத்தின் எல்லா மாணவர்களின் ட்விட்டர்/பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் மேற்கண்ட நிறுவனங்களின் கணக்குகளோடு இணைக்க வேண்டும்.
* தனது நிறுவனத்தில் நடைபெற்ற நல்ல சாதனை ஒன்றை வாரந்தோறும் குறைந்தது ஒன்றாவது பதிந்து பகிர வேண்டும்.
*மற்ற நிறுவனங்கள் இதுபோல பதியும் சாதனைக் கதைளை தனது நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுக்குப் பகிர வேண்டும்.

மேலோட்டமான முதல் பார்வையில் பார்த்தால், இது நல்லதுதானே என்று தோன்றும். நாடெங்கும் ஏதோவொரு மூலையில் உள்ள ஏதேனுமொரு கல்வி நிறுவனத்தில் நடைபெறும் சாதனைக் கதைகளை நாடெங்கும் உள்ள இதர நிறுவனங்கள் அறிந்து கொள்வது நல்லதுதானே? நல்லதுதான். சந்தேகமே கிடையாது.

ஆனால், சாதனைக் கதைகள் என்ற பெயரில் என்னென்ன கதைகள் பகிரப்படும் என்பதை யார் உறுதி செய்வது?
மதவெறுப்பு, பெண்ணிய எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன சிந்தனைகள் போன்றவற்றை வெளியிடும் பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை பிரதமரே ஃபாலோ செய்து கொண்டிருக்கிற நிலைதான் இன்று. மிகப்பெரிய கல்விநிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களே ஆட்சேபகரமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் காலம் இன்று. கஷ்மீருக்கு சிறப்பதிகாரம் ரத்து செய்யப்பட்டதால் கஷ்மீர் பெண்களைக் கொண்டு வந்து கல்யாணம் செய்யலாம் என்று ஒரு மாநில முதல்வரே சொல்கிற சூழல் இன்று. இத்தகைய சூழலில், எந்த மாதிரியான சாதனைகள் பகிரப்படும் என்ற உத்திரவாதம் உண்டா?

அதுதவிர, அறிவியல்சார் கல்வி நிறுவனம் ஒன்றின் அறிவியல்-தொடர்புடைய சாதனைக்கதை, இலக்கியம்-சார் நிறுவனத்தின் மாணவர்களுக்குத் தேவையற்றது. அதேபோல, வணிகம்-சார் கல்லூரியின் கதை ஐஐடியின் தொழில்நுட்ப மாணவர்களுக்குத் தேவைப்படாது. (விரும்புவோர் அவர்களாகவே தேடிப்படித்துக் கொள்ள முடியும் என்பது வேறு விஷயம்.) இப்படி எந்தப் பாகுபாடும் இன்றி எல்லாக் கல்வி நிறுவனங்களின் சமூக வலைதளங்களையும் இணைப்பதன் மூலம் – எல்லா மாணவர்களையும் இணைப்பதன் மூலம் இவர்கள் சாதிக்கப்போவது என்ன? அல்லது செய்ய விரும்புவது என்ன என்ற கேள்வி எழுகிறது.

ஆண்டிராய்டு / ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன் வசதி இல்லாத லட்சக் கணக்கான மாணவர்கள் இருக்கவே செய்கிறார்கள். கல்வி நிதிப் பணிகளின் மூலமாக, கிராமப்புறங்களிலிருந்து வரும் பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன்கள் கிடையாது என்பதை அறிந்திருக்கிறேன். ஸ்மார்ட் போன்கள் என்ன, சாதாரண போன்கள் இல்லாதவர்களும் ஏராளம். அவர்களுக்கு இந்த இணைப்பால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. (ஒருவேளை இந்தத் திட்டத்தால் பயன் கிடைக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், மேற்குறிப்பிட்ட மாணவர்கள் அந்தப் பயனை அடைய முடியாது.)

ஸ்மார்ட்போன் வைத்திருக்கிற மாணவர்கள் பேஸ்புக்/ட்விட்டர்/இன்ஸ்டாகிராம் கணக்குகளில் அவரவர் விருப்பப்பட்டதை எழுதுவார்கள். அது அரசியலாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம், வெறும் பொழுதுபோக்காக இருக்கலாம். வெறுமனே போட்டோ போடுகிறவர்களாக இருக்கலாம். மீம் தயாரிப்பவர்களாக இருக்கலாம். நகைச்சுவையாக எழுதுகிறவர்களாக இருக்கலாம். அவர்களுடைய பேஸ்புக் கணக்கு நிறுவனத்தின் கணக்குடன் இணைக்கப்படும் என்றால், அவர்கள் தம் எழுத்துகளை ஒரு வரம்புக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். கல்லூரியையோ நிர்வாகத்தையோ ஆசிரியர்களையோ கேள்வி கேட்கும் பதிவு எழுத முடியாது. சுதந்திரமாக இயங்க முடியாது.

இதற்கு மாற்றுவழி - கல்லூரிக்கென ஒரு ஐடி, சொந்த விஷயங்களுக்கென ஒரு ஐடி ஆக இரண்டு ஐடிக்கள் வைத்திருக்க வேண்டும். செல்போனில் பயன்படுத்தும் மாணவர்கள் இரண்டு ஐடிகளை நிர்வகிப்பதும் சிரமம் . அதுபோக, ஒரே போன் நம்பரை வைத்து இரண்டு ஐடிகளை உருவாக்குவதும் சிரமம்.

இப்போதே பல நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, விண்ணப்பதார்ரின் பேஸ்புக்/ட்விட்டர் கணக்கை ஆராய்ந்து, அவர் எப்படிப்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று பரிசீலிப்பதும் ஒரு நடைமுறையாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில், மாணவர்கள் தம் கருத்துகளை வெளியிட்டதற்காக மிரட்டப்படக்கூடும், அல்லது பரீட்சை, மார்க், நடத்தைச் சான்றிதழ் போன்ற காரணிகளுக்காக தமது கருத்துகளை வெளியிடுவதை தாமாகவே நிறுத்திக் கொள்ளவும் கூடும். அரசை விமர்சிக்கும் அல்லது சமூகப் பிரச்சினைகளில் பொது புத்திக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ‘உங்கள் பிள்ளைகளை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடப்படக்கூடும். மாற்றுக் கருத்துகள் பதிந்தமைக்காக கல்லூரிக்குள்ளேயே மாணவர்களுக்குள் விரோதம் வரக்கூடும். ஒரு நிறுவனத்துக்குள் எந்தச் சித்தாந்தக் கும்பல் வலுவாக இருக்கிறதோ அந்த சித்தாந்தக் கும்பல் இதர சிந்தனையாளர்களை மிரட்டவும் தாக்கவும் கூடும்.

இப்போது முதல் பத்தியை திரும்பவும் படியுங்கள்.

மேலும், ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் பொதுவாக ஒரு மாணவர் 2-4 ஆண்டுகள் வரைதான் இருப்பார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கணக்கு நீக்கப்பட வேண்டும். இல்லையேல் பயனிலாக் கணக்குகள்தான் கோடிக்கணக்கில் இருந்து கொண்டிருக்கும்.
அதுதவிர, இந்த ஏற்பாடு செய்திகளை / தகவல்களைப் பரப்பும் களமாகவே தெரிகிறதே தவிர, உரையாடலுக்கான களமாகத் தெரியவில்லை. உரையாடல் என்று வருமானால், அது இன்னும் சிக்கல்களையே ஏற்படுத்தும்.

கல்வி நிறுவனங்களில் நடைபெறுகிற சாதனைகள் அவ்வளவு சிறப்பாக இருக்குமானால் அவை செய்தி ஊடகங்களில் வெளி வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை மாணவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருமே அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. வாட்ஸ்அப்களில் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில், மைய அரசின் இந்த முயற்சி தேவையில்லாத ஆணி
அல்லது மாற்றுக் கருத்துக்கான களத்தை சவப்பெட்டிக்குள் வைத்து அடிப்பதற்கான ஆணி

இதை எழுதி முடித்தபோது வந்த மற்றொரு செய்தி - பேஸ்புக் போன்ற சமூக ஊடகக் கணக்குகளை ஆதார் அடையாளத்துடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. ஆதார் என்னும் அடையாள அட்டையே தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுகிறது என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்து, அரசு சார்ந்த பணிகளுக்கும்கூட எல்லாவற்றுக்கும் அதை நிர்ப்பந்தப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்து விட்டது.

இந்நிலையில், அரசு சாராத சமூக ஊடக அடையாளத்தையும் ஆதாருடன் இணைப்பது என்பது தமது கருத்துகளை வெளிப்படுத்த புதிதாகக் கிடைத்த சுதந்திர வெளியைப் பயன்படுத்த முடியாமல் கருத்து சுதந்திரத்தைப் புதைக்கும் சவப்பெட்டியின் மீதான மற்றொரு ஆணியாகவே இருக்கும்.

-Shahjahan R