facebook-round

img

கொரோனா வாக்சின் ஊழல்

கோவிஷீல்ட் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில், அதன் விலை 150 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 150 ரூபாயே லாபகரமானதுதான் என்றார் கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் பூனேவாலா.

ஒரு மாதத்துக்கு முன்பு அரசு புதிதாக ஓர் உத்தரவு வெளியிடுகிறது. மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்கலாம் என்கிறது.

150 ரூபாய்க்கு விற்றாலே லாபகரமானது என்னும்போது மாநில அரசுகளுக்கு எதற்காக 400 ரூபாய் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. வெளிநாடுகளில் 200-250 ரூபாய்க்குக் கிடைக்கும்போது இங்கே மட்டும் ஏன் 400 ரூபாய் என்ற கேள்விக்கும் விடை இல்லை. காரணம் திமிர்த்தனம் மட்டும்தானா?

வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் தருவது எப்படி என்ற கேள்விக்கு, வெளிநாடுகள் உற்பத்திக்கும் முதலீட்டுக்கும் அட்வான்ஸ் பணம் கொடுத்தார்கள் என்றார் சீரம் இன்ஸ்டிட்யூட் தலைவர். நியாயமான காரணம்தான். அப்படியானால் இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? முன்பணம் கொடுத்து உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியிருக்க வேண்டும். விலையை குறைவாகவே வைத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் 150 ரூபாய் மருந்தை 1200 வரை விற்றுக் கொள்ளலாம் என்று சொல்வதன் பின்னணி என்ன?

விஷயம் நீதிமன்றத்துக்குப் போனது. விலை விஷயத்தில் நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை என்று கூறியிருக்கிறது மத்திய அரசு.

அத்தியாவசிய மருந்துகள் என்னும்போது, அரசு நினைத்தால், 150 ரூபாய்க்குத்தான் விற்றாக வேண்டும் என்று சட்டமே போட முடியும். ஆனால் இந்த அரசோ, தனக்கு மட்டும் 150க்கு விற்கலாம், மாநில அரசுகளுக்கு 400க்கு விற்கலாம், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 வரை விற்கலாம் என அனுமதித்திருக்கிறது.

அதாவது, அரசின் சார்பாக இலவசமாக தடுப்பு மருந்து தரும் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிக்கொண்டு நம்மை எல்லாம் தனியார் பக்கம் தள்ளி விடுகிறது.

இதன் விளைவாகத்தான் இப்போது தடுப்பூசி எங்குமே கிடைப்பதில்லை.

கடந்த ஆண்டு தட்டில் அடி, விளக்குப்புடி என்று டிராமா காட்டிய மோடி, இப்போது வாக்சின் திருவிழா என்று அறிவித்தார். மே 1ஆம் தேதி முதல் 18-45 வயதுப் பிரிவினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார்.

ஆரோக்கிய சேது என்ற மொன்னை ஆப்பு செத்துக் கிடக்கிறது. முதல் டோஸ் போட்டவர்களுக்கும் இரண்டாவது டோஸ் போட வாக்சின் கிடைக்குமா என்று தெரியவில்லை. பிரதமர் முதல் அத்தனை அமைச்சர்களும் பங்கர்களுக்குள் தலைமறைவாகி விட்டார்கள்.

பல மாநிலங்களில் இன்றுவரை வாக்சின் கிடைக்கவில்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 18-44 பிரிவினருக்கு தடுப்பூசி இப்போதைக்குக் கிடையாது என நிறுத்தி வைத்துள்ளன.

இதற்கிடையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்த தடுப்பூசி விவரங்களைப் பார்த்தால் பகீர் என்கிறது.

மே 1 முதல் 12 வரை 18-44 வயதுப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டது 34.66 லட்சம் டோஸ்கள்.

இதில் 85 விழுக்காடு குஜராத், ஹரியாணா, பீகார், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.

குஜராத் - 3.86 lakh

ஹரியாணா - 3.55 lakh

பீகார் - 3.02 lakh

உத்திரப் பிரேதசம் - 2.65 lakh

மகாராஷ்டிரா - 6.25 lakh

தில்லி - 4.71 lakh

ராஜஸ்தான் - 5.49 lakh

உத்தராகண்ட் - 50968

அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிற இதர மாநிலங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது?

கேரளத்துக்கு வெறும் 771 டோஸ்கள்

ஆந்திரப் பிரதேசத்துக்கு 1133

தமிழ்நாட்டுக்கு 22326

மேற்கு வங்கம் - 12751

சத்தீஸ்கர் - 1026

பஞ்சாப் - 5469

ஜார்க்கண்ட் - 94

இந்நிலையில் மாநிலங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்யவேண்டி வருகிறது. சர்வேதச டெண்டர்கள் மூலம் தடுப்பு மருந்து வாங்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான். தன் மாநில மக்களின் பாதுகாப்புக்குத் தேவைதான். ஆனால் உண்மையில் மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்த்தது. தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகிறது. மாநில அரசுகளின்மீது சுமையை இறக்கி விட்டு கைகழுவிக் கொள்ளப் போகிறது.

இப்போது யோசியுங்கள்.

இது இந்திய அரசா?

எல்லா மாநிலங்களையும் சமமாக மதிக்கும் ஒன்றிய அரசா?

இல்லை தெற்கிலிருந்து பிடுங்கி வடக்குக்கு மட்டும் வழங்கும் வஞ்சக அரசா?

நீங்களே முடிவு செய்யுங்கள்.

Shajahan.R