வியாழன், செப்டம்பர் 23, 2021

facebook-round

img

மோடி அரசின் அயலுறவுக் கொள்கையின் தோல்விகள்

#மீண்டும்_ஏன்__கூடாது_பாஜக_அரசு? (1)


முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அருண் சிங் கூறுவன:

1.பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவுடன் மோடி அரசின் உறவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகல்முறை வணிகப் பயன்பாட்டின் நோக்கிலேயே உள்ளது. வணிக உறவுகளில் சுய லாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ருஷ்யா முதலான நாடுகளுடனான உறவுகள், அவற்றின் மீது அது விதிக்கும் தண்டனை நோக்கிலான கட்டுப்பாடுகள் முதலியன இந்திய நலன்களையும், அதன் இழப்புகளையும் கணக்கில் கொள்ளாதவை. எடுத்துக்காட்டாக ஈரானுடன் எண்ணை வர்த்தகம் கூடாது என ட்ரம்ப் விதிக்கும் தடையின் விளைவாக இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு முதலியன ஏற்படுகிறது.

2. பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய, நம்பத் தகுந்த பங்காளியான ருஷ்யாவுடனான உறவு சீனாவுடன் இணைக்கப்பட்டு மிகவும் சிக்கலாக மாறிக் கொண்டுள்ளது. முன்னைப்போலன்றி இப்போது ருஷ்ய - பாக் உறவு மேம்பட்டுள்ளது. இராணுவ ஹெலிகாப்டர்களை ருஷ்யா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. ஆப்கனுடனான பாக்கின் உறவு, சில பயங்கரவாத அமைப்புகள் மீதான பாக்கின் நடவடிக்கைகள் ஆகியவற்றை ருஷ்யா பாராட்டியுள்ளது. ஆக அண்டை நாடும், சற்றே பகை நாடுமான பாக்குடன் இப்போது ருஷ்யாவின் உறவு மேம்படுகிறது.

3. சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி (GDP) இந்தியாவைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். அது இராணுவத்திற்குச் செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.. பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் ஆகியவற்றில் அதன் தாக்கம் உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அருகாமையில் உள்ள நாடுகளான நேபாளம் ஶ்ரீலங்கா முதலான நாடுகளின் உறவு, இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சீனாவுடன் அதிகரித்துக் கொண்டே போகிறது.

4.பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என உலகளவில் பாக் பற்றி ஒரு கருத்து இருந்த போதிலும், ஆப்கானிஸ்தான், சீனா ஆகியவற்றைக் கையாள்வதில் அமெரிக்காவிற்கு பாக் துணைபுரிவதன் அடிப்படையில் அமெரிக்க - பாக் உறவு வலுவாக உள்ளது.

5.அணு உலை மூலப் பொருள் விநியோகக் குழுவில் (NSG) இந்தியா உறுப்பினர் ஆவது, செய்சல்ஸ் தீவில் கடற்படைத் தளம் அமைப்பது ஆகியவற்றில் இந்திய அரசின் முயற்சிகள் தேக்க நிலையைத் தாண்ட இயவில்லை.

6. ஐ.நா பாதுகாப்பு அவையில் உறுப்பினர் ஆகும் இந்தியக் கனவு மோடி ஆட்சியில் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது.

உலக அளவில் பெரு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ள காலம் இது. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து ஒரு பக்கமாகச் சாய்வது, பல்லிளிப்பது, வெட்டி டூர் அடிப்பது, ஒரு கோடி ரூபாய்க்குச் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு மினுக்குவது - இவை அல்ல ராஜ தந்திரம் என்பது.

(தொடரும்)

Marx Anthonisamy


;