election2021

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள்......

மத்திய அரசும் மாநில அரசும்அரசு ஊழியர் - ஆசிரியர்களின்வாழ்வில் ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்து, ஓய்வுபெற்றபின் அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. 2003ஆம் ஆண்டு தமிழகத்திலே அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எவருக்கும் ஓய்வூதியமே வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின்கீழ் ஊழியர்களிடம் மாதந்தோறும் வசூல் செய்த பத்து சதவீதம்தொகை, பல லட்சம் கோடி ரூபாய் எங்கேயிருக்கிறது என்றே தெரியவில்லை. இத்திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். பழையஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று கோரி போராடிய அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள்  போராட்டம் மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது.  இப்போதுஅதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் வாக்கு கோரி இவர்கள் நம்மிடம் வருகிறார்கள்.

அஇஅதிமுக அரசு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை இன்னமும் வழங்கவில்லை. மேலும் சரண் விடுப்பு, விடுப்பு பயண சலுகை ஆகியவற்றையும் ரத்து செய்துவிட்டது.தமிழ்நாட்டில் கடந்த 15 மாத காலமாக அகவிலைப்படியையும் அளிக்காமல்முடக்கி வைத்திருக்கிறது. இவற்றை அளிக்கவேண்டும் என்று கோரி போராடிய அரசுஊழியர் – ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவி, காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டது.இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டவர்கள்தான் இப்போதுமீண்டும் வாக்கு கேட்டு நம்மிடம் வருகிறார்கள்.தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் சுமார்4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்பிட இந்தஅரசு மறுத்து வருகிறது. அப்படியே தப்பித்தவறி ஒருசில நியமனங்களைச் செய்ய முன்வரும்போது, அந்தப் பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்காமல் வடநாட்டிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்யும் கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது. இதனை மின்வாரியத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது பார்த்தோம். இதல்லாமல் ரயில்வே, தகவல்-தொழில்நுட்பத் துறை, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஆகியவற்றில் நிரப்பப்படும் பணியிடங்கள் அநேகமாக 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வடமாநிலத்தவர்களால் நிரப்பப்படும் கொடுமையும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுக தன் தேர்தல் அறிக்கையில்,  புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், உயர்கல்வி பயில்வோருக்கு அண்ணா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, கடந்த ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படும் என்றும் பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்கள் குடும்ப நல நிதி 5 லட்சம் ரூபாயாக  உயர்த்தப்படும் என்றும், இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்க நிர்வாகத்தீர்ப்பாயம் (Administrative Tribunal) அமைக்கப்படும் என்றும், பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17ஆ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆசிரியருக்கு பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் மாணவர்களின் நலன் காத்திடநீட் தேர்வு ரத்து செய்யப்படும், முதியோர்ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்,  100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்,  புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்துசெய்யப்படும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டின் நலன் காத்திட, தமிழ் மக்களின் நலன் காத்திட, நாட்டின் நலன் காத்திட, நாட்டில் அனைத்துத் தரப்பினரும் மத நல்லிணக்கத்துடன் சமத்துவத்துடன் வாழ்வதை உறுதி செய்திட, விவசாயிகள் நலன் காத்திட, தொழிலாளர்களின் நலன் காத்திட, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைத்திட, தலித்/பழங்குடியின மாணவர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான கல்வி உதவிப்பணம் கிடைத்திட, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக மீண்டும் பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின்  துண்டுப்பிரசுரத்திலிருந்து) 

;