election2021

img

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய பாஜக - ஏபிவிபி கும்பல்.... எதையும் சந்திக்கத் தயார் என்று ராகேஷ் திகாயத் அறிவிப்பு....

ஜெய்ப்பூர்:
விவசாயிகள் சங்கத் தலைவரான ராகேஷ் திகாயத் சென்ற வாகனம் மீது ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி மற்றும் பாஜகவைச் சேர்ந்த கும்பல் கல்வீசித் தாக்குதல்நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 130 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். தில்லி எல்லைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்குச் சென்று பாஜக-வுக்கு எதிராக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்தான், விவசாயிகளின் போராட்டத்தில் முன்னணியில் இருந்துவரும் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் தான்சென்றுகொண்டிருந்த வாகனம் மீது பாஜகவினர் திட்டமிட்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ராகேஷ் திகாயத் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பைமல்கெதாகிராமத்தில் நடைபெற்ற ‘கிசான் மகா பஞ்சாயத்து’ கூட்டத்தில் ராகேஷ் திகாயத் பங்கேற்றார். அப்போது, தன்மீதான தாக்குதலைக் குறிப் பிட்ட அவர், “பாஜக தொண்டர்கள் நடத்தும் தாக்குதல்கள் எங்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும். ஏனெனில் இது விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்ஆகும். எனவே, இதுபோன்ற அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும் மனதளவில் தயாராகத்தான் விவசாயிகளாகிய நாங்கள் இருக்கிறோம்” என்று ராகேஷ் திகாயத் தெரிவித் துள்ளார். 

இதனிடையே, திகாயத் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி-யின் தலைவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திகாயத் மீதான இந்த தாக்குதல் முயற்சியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டித்துள்ளார். “அஹிம்சை போராட்டம் விவசாயிகளை அச்சமற்றதாக்கும்போது, தாக்குதல் நடத்துவது பற்றி சங்-பரிவார்,தனது அமைப்பான ஏபிவிபி-க்கு கற்றுக்கொடுக்கிறது. ஆனால், நாம் ஒன்றாகச் சேர்ந்து சங்-பரிவாரங்களை எதிர்கொள்வோம். 3 வேளாண் சட்டங்களுமே, தேசத்துக்கு எதிரான சட்டங்கள். அவை நீக்கப்பட்டால்தான் நாம் போராட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

;