election2021

img

விடுமுறை நாளில் வாக்கு எண்ணும் மையத்தில் சர்வர், கணினி, ஏசி இயங்கியதில் சந்தேகம்..... திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு....

கரூர்:
கரூரில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் விடுமுறை நாளில் சர்வர், கணினி, ஏசிஇயங்கியதில் சந்தேகம் உள்ளது என கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்.6 அன்று பதிவான வாக்குகள் அனைத்தும் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு எண்ணும் அறையின் அருகே உள்ளஅறையில் சர்வர், ஏசி இயங்கியதாக திமுக முகவர்கள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் திங்கள்கிழமை வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் புகார் கூறப்பட்ட அறையையும் பார்வையிட்டு கணினி பொறியாளர்கள் மூலம் சோதனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வி.செந்தில்பாலாஜி கூறுகையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் பின்புறம் கேமரா பொருத்தப்படாமல் இருந்ததை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவித்ததால் பொருத்தப்பட்டது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை நாளில் கல்லூரி நிர்வாகத்தின் கணினி அறை மட்டும் இயங்கியதாக எங்களது முகவர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக அந்த அறை பூட்டப்பட்டிருக்கும். ஆனால் ஏசியும், சர்வரும் இயங்கியிருக்கின்றன. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. முழுமையாக சந்தேகத்தை தீர்க்க முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டும்.கரூர் சட்டமன்றத் தொகுதியில் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 28 மேஜைகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

அப்போதுதான் விரைவாக வாக்கு எண்ணிக்கையை முடிக்க முடியும். ஒரு ரவுண்டு வாக்கு எண்ணிக்கை முடிய 45 நிமிடமாகிவிடும். எனவே 28 மேஜை வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆட்சியர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். கூடுதல் அறை என்பது முக்கியமில்லை. கூடுதல் மேஜைகள்தான் முக்கியம். 355 பூத்துகளில் 77 வேட்பாளர்களுக்கும் வாக்கு எண்ண45 நிமிடமானால், வாக்கு எண்ணிக்கை முடியஅடுத்த நாளாகிவிடும். கொரோனா காலம் என்பதால் 77 வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் நிற்க வேண்டும். எனவேதான் 28 மேஜை வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கும் மனு அனுப்பியுள்ளோம். இப்போது 14 மேஜைகள்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால்தான் கூடுதலாக கேட்டுள்ளோம். வாக்கு எண்ணும் மையத்தில்எந்த உபகரணமும் கொண்டு வரக்கூடாது. கல்லூரி நிர்வாகமாக இருந்தாலும் வாக்கு எண்ணும் இடம் வரை தடை செய்ய வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இதை மாவட்ட நிர்வாகமோ, தேர்தல் ஆணையமோ தட்டிக் கழிக்கக்கூடாது. 

கல்லூரி வளாகத்தில் லேப்டாப் கொண்டு வருவோம், சர்வர் வரும், கல்லூரி நிர்வாகம்தான் அது என மாவட்ட தேர்தல் நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. கல்லூரிவளாகத்திற்குள்தான் அனைத்து வாக்கு எண்ணிக்கை அறைகளும் உள்ளன. இங்கிருக்கும் சர்வரோ, வைபையோ அங்கும் வேலை செய்யலாம். இதனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கல்லூரிக்குள் சர்வரையோ, வைபை-யோ வேலை செய்ய கல்லூரி நிர்வாகத்தை அனுமதிக்கக் கூடாது என்றார்.

;