கொல்கத்தா:
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை இடது முன்னணி வெளியிட்டுள்ளது. இடதுமுன்னணியின் தலைவர் பிமன் பாசு செவ்வாய்க்கிழமை 104 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். முதல்இரண்டு கட்டங்களில் தேர்தல் நடைபெறும் 56 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடது முன்னணி-காங்கிரஸ்-ஐஎஸ்எப் கூட்டணி திரிணாமுல் மற்றும் பாஜகவுக்கு எதிரான முன்னணியாக போட்டியிடுகிறது. இதில் இடது முன்னணி 165 இடங்களிலும், காங்கிரஸ் 92, ஐஎஸ்எப் 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இடதுமுன்னணி இதுவரை 160 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று பிமன் பாசு கூறினார். காங்கிரஸ், ஐஎஸ்எப் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்களில் பலர் புதியவர்கள். அதில் இளைஞர்கள் மற்றும்பெண்களின் எண்ணிக்கை அதிகமாகஉள்ளது. 38 பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள். 28 பெண்கள் வேட்பாளர்கள்.சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உறுப்பினர் முகமது சலீம் ஹூக்ளி மாவட்டத்தின் சாண்டிதலா-விலிருந்து போட்டியிடுவார். நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சிபிஎம் வேட்பாளராக வாலிபர் சங்க மாநிலத் தலைவர்மீனாட்சி முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார்.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷி கோஷ், பர்துவான் மாவட்டத்தில் உள்ள ஜமுரியாவிலிருந்து சிபிஎம் வேட்பாளராக போட்டியிடுவார். சிபிஎம் வேட்பாளர் பட்டியலில் வாலிபர் சங்க மாநில செயலாளர் சயன்தீப்மித்ரா மற்றும் முன்னாள் எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் மதுஜா சென் ராய் ஆகியோரும் உள்ளனர். இந்த பட்டியலில் எஸ்எப்ஐ, வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் பல முன்னாள் நிர்வாகிகளும் உள்ளனர்.
திரிணாமுல்லை அதிகாரத்திலிருந்து வெளியேற்றவும், பாஜகவை தனிமைப்படுத்தவும் ஒன்றுபடக்கூடிய மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளின் உதவியுடன் சம்யுக்த மோர்ச்சா உருவாக்கப்பட்டுள்ளது என்று பிமன் பாசு கூறினார். 294 தொகுதிகளிலும் சம்யுக்த மோர்ச்சா வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், பல ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகள் சம்யுக்த மோர்ச்சாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.