கொல்கத்தா:
பிரதமரின் அரசு அலுவல் சார்ந்தபணிகளுக்காக வாங்கப்பட்ட விவிஐபி விமானத்தை, நரேந்திர மோடி தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு போயிங்-777 (Boeing 777 aircraft) விமானங்கள் ரூ. 8 ஆயிரத்து 400 கோடி செலவில் வாங்கப்பட்டன. வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரசு அலுவல்சார்ந்த உள்நாட்டுப் பயணங்களுக்குஇந்த விமானங்கள் பயன்படுத்தப் படும் என்று கூறப்பட்டது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவிஐபி விமானங்களை, தொடர்ச்சியாக, தான் சார்ந்த பாஜக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அண்மையில், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி ஏப்ரல் 3-ஆம் தேதிஹூக்ளி மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டங்களுக்கும், ‘போயிங்-777’ விவிஐபி விமானத் தைத்தான் பிரதமர் மோடி பயன்படுத் தினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடி, தேர்தல்பிரச்சாரத்திற்கு விவிஐபி விமானத்தைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரும், மேற்குவங்க மாநிலத் தலைவருமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடிதனது சொந்தக் கட்சியின் தேர்தல்பிரச்சாரத்திற்கு விவிஐபி விமானத்தைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.“அரசின் அலுவல் சார்ந்த நோக்கமும் பிரதமரின் பாதுகாப்புமே விவிஐபி விமானப் பயன்பாட்டிற்கான முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.ஆனால் பிரதமர் ஒரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது, அது மற்றொரு அரசியல் தலைவருக்கு செலவாகவும் துன்புறுத்தலாகவும் இருக்கக் கூடாது. பிரதமர் மோடியின் பிரச்சாரப் பயணத் திட்டத்தால், நானே துன்புறுத்தலுக்கு ஆளானேன், முன்கூட்டி திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. பிரதமரின் அரசியல் வேலைத்திட்டத்திற்காக மற்ற அனைத்து இயக்கங்களையும் துண்டிக்க வேண்டுமா? என்று கேட்கிறேன்.
நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, எனக்கு அளிக்கப்பட்ட காரை தேர்தலின்போது பயன்படுத்தவில்லை. ஆனால், விவிஐபி விமானத்தையே அரசியல் பொதுக்கூட்டங் களுக்கு பயன்படுத்தலாம் என்பதைநான் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன். இந்தியா இன்னும் ஏழை நாடாகஇருக்கிறது. கொரோனா தொற்று சூழ்நிலையில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் சம்பளத்தை தியாகம் செய்தனர். வாக்காளர்கள், தங்களது எம்.பி. மூலம் கிடைத்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை- இரண்டாண்டு வளர்ச்சித்திட்டங்களை தியாகம் செய்தார்கள். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் பலஆயிரம் கோடி மக்களின் வரிப்பணத் தில் பிரதமரின் பாதுகாப்புக்காக அதிநவீன விமானம் வாங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.