மதுரை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாக தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் முனைவர் அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அரசியல் கட்சிகள், தனிநபர்கள் பலர் களத்தில் உள்ளனர். கிறித்தவ சமூகம் ஒரு அரசியல் கட்சியல்ல. எனினும் அடிப்படை அரசியல் உரிமைகள் கொண்ட ஒரு சமூகமாகும். நாம் இம்மண்ணின் மைந்தர்கள். அரசியல் சாசனரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதச் சிறுபான்மையினர், இம்மண்ணுக்கும் , வரலாற்றுக்கும், கலாச்சாரத்திற்கும் உரிமை கொண்டவர்கள். விமர்சனங்கள் இருப்பினும் எந்த ஒரு கட்சி, அமைப்பு அல்லது தனிநபர்கள் மீதும் எங்களுக்கு எத்தகைய வெறுப்பும் இல்லை. சனநாயக வெளியைப் பயன்படுத்தி, எவர் வேண்டுமானாலும் அமைப்பாகவும், கட்சியாகவும் தேர்தலில் பங்கேற்கும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.தமிழகம் சந்திக்கவிருக்கின்ற தேர்தல், தமிழுக்கும் தமிழகத்திற்கும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் அரசியல் சாசனம் வகுக்கும் சனநாயகம், சமத்துவம், சமயசார்பின்மை என்னும் மதிப்பீடுகளுக்கும் மிகப்பெரிய சவால்களை சந்திக்கவிருக்கும் ஒன்றாகும்.நடுவண் அரசின் அண்மைக்கால கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் குடிமக்களை அதிகாரப்படுத்துவதாய் இல்லை. சனநாயக நியதிகள் மீறப்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கொடுங்கோல் சட்டங்களால் மானுட உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. மதச் சிறுபான்மையினரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேளாண் குடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பறித்த சட்டம் போன்ற அண்மை மசோதாக்களையெல்லாம் நாடுதழுவிய எதிர்ப்பையும் தாண்டி, மத்திய அரசு நிறைவேற்றி வருகின்றதையும் பார்க்கிறோம்.
சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட தேசிய நிறுவனங்களின் செயல்பாடுகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இன்று மதிப்பில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் உயிர் மூச்சாம் மதச்சார்பின்மை இன்று பாரதிய ஜனதா அரசின் மதச்சார்பு நடவடிக்கைகளால் குலைந்து வருகிறது.தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, நடுவண் அரசின் மக்களுக்கெதிரான எந்த கொள்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை என்பதோடு, வெளிப்படையாக ஆதரவுமளித்து வரும் சூழல் எமக்கு வருத்தம் தருகிறது. அஇஅதிமுக கூட்டணி வெற்றிபெறுவது மதவாதச்சக்திகளின் வெற்றியாகவே அமையும் என்று நம்புகிறோம். தமிழக மக்களைக் காத்து வரும் சமூக நல்லிணக்கம், தமிழனின் வேலைவாய்ப்பு, மொழிவழிபட்ட அடையாளமெல்லாம் சிதைந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். தமிழகமும் இந்துத்துவா என்னும் ஒற்றைக் கருத்தியலால் உண்டு செரிக்கப்படுமோ என்று அஞ்சுகிறோம். அச்சக்திகளுடன் தமிழக கட்சிகள் சில கொண்டுள்ள கூட்டணி தமிழக மண்ணுக்கும், மக்களுக்கும், தமிழக அரசியல் மரபுக்கும் ஏற்புடையதல்ல.
எனவே சமயச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், தமிழ்மொழி, தமிழ் மண் , தமிழரின் நலம், மதவழி - மொழிவழி சிறுபான்மையினரின் நலம் மற்றும் பாலின சமத்துவம் விளைவோர் மதவாதக் கூட்டணியை வீழ்த்தும் வலிமை கொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டுவது வரலாற்றுக் கடமையாகிறது. இல்லாவிடில் இதுவரை கட்டிக்காத்த மொழியுரிமையும், வாழ்வியலும், பொருளாதாரச் சுயச்சார்பும் அரசியல் பண்பாடும், மதவாத சக்திகளால் சிதைக்கப்படும். அதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும். இத்தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற அணிகள் பல இருப்பினும், மதவாதத்தை வீழ்த்தும் வலிமையுள்ள அணியை ஆதரிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இவற்றை அவதானித்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதே மதவாதத்தை வீழ்த்துவதற்கு ஏதுவாக அமையும் என்று ஆழமாக நம்புகிறோம்.
சனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் போன்ற இயேசுவின் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் மதிப்பீடுகளை உயிர்த்தெழுப்புவதற்கும், தமிழ்மொழி, மரபுகள் , தமிழர் தம் வளர்ச்சி மற்றும் சிறுபான்மையினர் நலன் காப்பதற்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உத்தரவாதப்படுத்தும் நோக்குடன் இத்தேர்தலில் கவனத்துடன் கடமையாற்றவேண்டுமென்று அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.