election2021

img

விஷமான விலைவாசி... மோடி - எடப்பாடியே காரணம்.... வீரபாண்டி, நாமக்கல், வடமதுரை, மதுரை மாநகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் சாடல்.....

அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் அத்தனைபேருக்கும் செல்போன் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதே அறிவிப்பை கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் - நாடாளுமன்றத் தேர்தலிலும் அறிவித்தார்கள். யாருக்காவது கொடுக்கப்பட்டதா?2021 தேர்தல் அறிக்கையில் போலியானஅறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக தந்திருக்கும் இன்னொரு உறுதிமொழி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவோம் என்பது.
இன்றைக்கு தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. அதாவது 1 கோடியே 97 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அது முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே, தவறான - பொய்யானவாக்குறுதிகளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதுவும் இல்லை.நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள். நாளைக்கு ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் கொடுக்கப் போகிறோம் - விமானம் கொடுக்கப் போகிறோம் - ஒவ்வொருவருக்கும் ரயில் கொடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்புவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இன்றைக்கு விஷம் போல விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இன்றைக்கு இருக்கும் ஆட்சி ஈடுபடவில்லை.

உளுந்தம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் - இப்போது 150 வரை போய்விட்டது.  துவரம் பருப்பு ஒரு கிலோ திமுகஆட்சியில் 38 ரூபாய் - இப்போது அதுவும் 130 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. கடலைப் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 34 - இப்போது 120, பாமாயில் ஒரு லிட்டர் திமுக ஆட்சியில் 48 - இப்போது 130, சர்க்கரை ஒரு கிலோ திமுக ஆட்சியில் 18 - இப்போது 40, சிலிண்டர் ஒன்று திமுக ஆட்சியில் 400 ரூபாய் - இப்போது 875, பால் ஒரு லிட்டர் திமுகஆட்சியில் 35 - இப்போது 60.இவ்வாறு விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை. மாறாக பிரதமர் மோடியும், முதலமைச்சர் பழனிசாமியும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தி, விலையை அதிகரிக்கச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கதாநாயகன் என்று சொல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை ‘காமெடி வில்லன்‘.அதேபோல, பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசின் சார்பில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும், மகளிர் செலவைக் கட்டுப்படுத்த உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம்.

                                                 ******************

‘அதிமுக வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர் தான்’

நீங்கள் தயவுசெய்து ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றிபெறுவதும் ஒன்றுதான். பாஜக  உறுப்பின ராக வரவேண்டும் என்ற அவசியம்  இல்லை; அதிமுக வெற்றிபெற்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர்தான்.ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோம். அதில் தேனி தொகுதியில் அதிமுக எம்.பி. ஒருவர் வெற்றிபெற்றார். அவர் அதிமுக எம்.பி. அல்ல; பாஜக எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.எனவே அ.தி.மு.க. வெற்றி பெறக் கூடாது.பா.ஜ.க.வும் வெற்றி பெறக்கூடாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஒருபா.ஜ.க. எம்.எல்.ஏ. வந்தாலும் அது எந்த அளவிற்கு நாட்டுக்கு கெடுதல் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க.வின் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல், சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க. ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை இன்றைக்கு அடமானம் வைத்து இருக்கிறார். நம்முடைய உரிமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.காவிரியின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய நிதியை முறையாக பெற முடியவில்லை.மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தார்கள். 2014ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதற்குப் பிறகு அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமராக இருக்கும் மாண்புமிகு மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவதற்கு முன்பு அதற்கு அடிக்கல் நாட்டினார்.2014-இல் அறிவித்த திட்டத்திற்கு, 2019-இல் அடிக்கல் நாட்டினார். இப்போது 2021 வந்துவிட்டது. இதுவரையில் ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. அந்த திட்டம் இப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக் கிறது.எந்த திட்டம் கிடப்பில் இருந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அதை விரிவுபடுத்தி, அந்த எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். நாங்கள் அதில்அரசியல் நோக்கம் பார்க்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அதுமட்டுமல்ல உள்ளாட்சித் தேர்தலை முறையாக இந்த ஆட்சி நடத்தவில்லை. அதற்குப் பிறகு நாம் நடத்த வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் சென்று ஒரு சில மாவட்டஊராட்சி பகுதிகளில் மட்டும் தான் நடைபெற்றது.

பேரூராட்சி - நகராட்சி - மாநகராட்சிகளில் நடக்கவில்லை. எனவே திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நடக்காமல் இருக்கும் அந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவோம்.பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம்போராடிக்கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப்பணியாளர்கள் - தூய்மைப் பணியாளர்கள்வேலை நிரந்தரம் வேண்டும் என்று சொல்லி ஒரு பக்கத்தில் போராடிக்கொண்டிருக் கிறார்கள். அரசு ஊழியர்கள் - ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.முதலமைச்சரும் - அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்களே தவிர, எந்த முதலீடும்வரவில்லை. வேலை வாய்ப்பும் இல்லை. வேலை இல்லாமல் இன்றைக்கு இளைஞர்கள் - பட்டதாரிகள் தவித்துக்கொண்டிருக் கிறார்கள்.இவ்வாறு பத்தாண்டு காலமாக பாழாகிப் போன இந்த தமிழகத்தை மீட்க வேண்டும்.

படக்குறிப்புகள் : மார்ச் 16, 17 தேதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் வீரபாண்டி, நாமக்கல், திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், மதுரை மாநகர் ஆகிய இடங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண், ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்செல்வன் ஆகியோரை ஆதரித்து வீரபாண்டியிலும்; திருச்செங்கோடு தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரன், பரமத்தி - வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி, நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் பொன்னுசாமி ஆகியோருக்கு வாக்கு கேட்டு நாமக்கல்லிலும்;நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்தி ராஜன் ஆகியோரை ஆதரித்து வடமதுரையிலும்;மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சி.சின்னம்மாள், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி, மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் ஆகியோரை ஆதரித்து மதுரை பழங்காநத்தத்திலும் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து...