கோவை:
ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக, அதிமுகவை விமர்சிப்பதற்கு மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை விமர்சிப்பதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் பாஜகவின் “பி டீம்” என்பதை தனது பேச்சின்மூலம் உறுதிப்படுத்தி இருக் கின்றார் என மார்க்சிஸ்ட் கட்சியின்கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினரும், சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளருமான நா.கார்த்திக்கை ஆதரித்து பி.ஆர்.நடராஜன் எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். ‘‘நாடாளுமன்ற உறுப்பினரான நானும்,சட்டமன்ற உறுப்பினரான கார்த்திக்கும் இந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என நடிகர் கமல்ஹாசன் பேசிஇருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மாநில ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விமர்சிக்காமல், 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவை விமர்சிக்காமல், சிறப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை விமர்சிப்பதில் இருந்தே கமல்ஹாசன் பா.ஜ.க வின் “பி டீம்” என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். காலில் அடிபட்ட கமல்ஹாசனுக்கு விரைவில் குணமடைய வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம். அதேநேரத்தில், கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் நோக்கிப்பாய வேண்டும். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இயக்கம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் என்பது கோவை மாவட்ட மக்களுக்கு தெரியும்’’ என பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறினார்.