election2021

img

எடப்பாடி பழனிசாமி விரைவில் முன்னாள் முதல்வர் ஆகிவிடுவார்...

மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் 12ஆயிரம் ஆண்டு காலத்து வரலாற்றை மீண்டும் எழுதுவது தான் அது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல், ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதனை திரும்ப எழுதுவது என்பது அதனை திருத்தும் முயற்சி தானே. மதச்சார்பற்ற இந்தியாவில் வரலாற்றை திருத்துவது தவறானதாகும். வரலாறு என்பது ஒன்று தானே.  அதற்காக  மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது அதில்  இந்திய வடகிழக்கை சார்ந்த 7  மாநிலத்தை சேர்ந்தவர்கள்  யாரும் இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 மாநிலத்தவர்களும்  சேர்க்கப்படவில்லை. 11 மாநிலத்தின் பங்கேற்பு இல்லாமல் இந்தியாவின் வரலாற்றை எழுதமுடியுமா? சேர, சோழ, பாண்டிய ஆட்சியின் வரலாற்றை யார் எழுதுவது? வடகிழக்கு மாநிலத்தின் வரலாறு என்னாவது? இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் பதில் இல்லை. இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் செயலை நமது முன்னோர்கள் செய்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்கள் இந்தியாவை துண்டாடநினைக்கின்றன.

பிரிவினைநோக்கம்
நாடு சுதந்திரம் பெற்றபோது மாநிலங்கள் இல்லை, சமஸ்தானங்கள் தான் இருந்தது. பன்முகத்தன்மை வாய்ந்த  ஒன்றுபட்ட இந்தியாவில் பண்பாட்டுக்கூறுகளை அடையாளப்படுத்தப்படவேண்டும் என பண்டிதநேரு விரும்பினார்.  நீண்டவிவாதத்திற்கு பிறகு மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதனால் தான் 70 ஆண்டுகள் ஆனபின்னரும்  இந்தியா ஒரே நாடாக இருக்கிறது.  இந்தியாவின் ஒருமைப்பாட்டு அடையாளத்தை மையப்படுத்துவதை விடுத்து பிரிவினை நோக்கோடு சாதி, மதம், இனம் என அடையாள அரசியலை  ஆர்எஸ்எஸ் - பாஜக முன்னெடுத்து வருகின்றனர்.

திமுக கூட்டணியின் வெற்றி நிச்சயம்
ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இத்தகைய திட்டங்கள் இந்தியாவுக்கு பேராபத்து என்பதை தமிழக மக்கள் விமர்சித்துள்ளனர்.தொலைநோக்கு பார்வையோடு மக்களின் நலனுக்காக உழைக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் பேராதரவு கொடுத்துவருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக தேர்தலில் நிற்பதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதிமுகவிற்கு அளிக்கப்படும் வாக்குகள், மதவாத பாஜகவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தான்.  அதிமுக என்ற கட்சி  ஜெயலலிதா அம்மையாரோடு மண்ணில் மறைந்துவிட்டது.  

அடிமைத்தனம்
மத்திய அரசாங்கத்தோடு இணைந்து நடப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மாறாக மோடியிடம் மண்டியிட்டுக் கிடப்பது தான் தவறு என்கிறோம். பணிவு வேறு, அடிமைத்தனம் வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதுவரை எந்த திட்டத்தையும் எடப்பாடி அரசு மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்ற வரலாறு இல்லை. எவ்வளவு சிறப்பு நிதியை பெற்றிருக்குறீர்கள் என்று சொல்லமுடியுமா? இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்ற சிறப்பு நிதியை பெறமுடிந்ததா? நீட் தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா இருந்தார் , எடப்பாடியாரே உங்களால் நீட்டை எதிர்க்க முடியுமா? உங்கள்  அரசு நீடிப்பதே பாஜகவின் தயவால் தான். 

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2500 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அமைக்கப்பட்டது.  விசாரணையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மேல்விசாரணை தேவை என்றார்கள் . சிபிஐக்கு விசாரணை சென்றபோது எடப்பாடி அரசு உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெற்றது. ஆனால் சிபிஐ இதுவரை தடையாணையை தகர்க்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. தடையாணை நீக்கப்பட்டால் எடப்பாடியார் முன்னாள் முதலமைச்சராகிவிடுவார்.

சென்னை துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து  மண்ணடி சந்திப்பு தம்புசட்டி தெருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதிலிருந்து...