election2021

img

மிதிவண்டியை பிரச்சார வாகனமாக மாற்றி தள்ளாத வயதிலும் நாகைமாலிக்கு வாக்குச் சேகரிக்கும் தோழர்.....

கீழ்வேளூர்:
அரைப்படி என்ன ஒரு படியாகவே சேர்த்து தருகிறோம். ஆனால் செங்கொடியை யாரும் பிடிக்கக்கூடாது என்றபண்ணையார்களின் கோரிக்கையை உடைத்தெறிந்து 44 உயிர்களை தியாகத்தீயில் விதைத்த வீரஞ்செறிந்த பூமி கீழத்தஞ்சை பூமி.
தள்ளாதவர்களும், தவழும் குழந்தைகளும் செங்கொடியை தங்களது தொப்புள் கொடிபோலவே கருதும் மண்.சிவப்பின் அடையாளமாக உள்ள கீழவெண்மணியை உள்ளடக்கிய உழைப்பாளிகள் நிறைந்த தொகுதியான கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும், ஏற்கனவே கீழ்வேளூர் தொகுதிஎம்.எல்.ஏ.வாக பதவி வகித்த நாகைமாலி வேட்பாளராக களமிறங்கி வாக்குச்சேகரித்து வருகிறார். 

அவருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் வாக்குகளை சேகரித்தாலும் ஒற்றை ஆளாக முதியவர் ஒருவர்தனக்கு சொந்தமான பழைய மிதிவண்டியில் செங்கொடியை கட்டி வைத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் பதிந்த அட்டைகளை சுற்றி கட்டி வைத்து பிரச்சாரவாகனமாக மாற்றி தொகுதி முழுக்க வலம் வருவது பலரும் கவனிக்கும் காட்சியாக இருக்கிறது. யார் தான் இவர்? என விசாரித்ததில், கீழையூர் ஒன்றியம் சின்னத்தும்பூர்கிராமத்தை சேர்ந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர்எம்.மணி  1947ல் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் 1977-ல்வாலிபர் சங்கத்தில் பணியாற்றி பின்னர்விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினராகவும், கட்சி கிளைச் செயலாளராகவும் பின்னர் கட்சி ஒன்றியக் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.இவருக்கு ஜானகி என்ற மனைவியும், லெனின் என்ற மகனும் திலகவதி, கல்யாணி ஆகிய இரண்டு மகளும் உள்ளனர். 

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு சங்க இயக்குநராக ஒருமுறை இருந்துள்ளார். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தொகுதியில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளருக்கு  தன்னந்தனியாகவே வாக்குச் சேகரித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் தவறாமல் வாக்குச் சேகரித்து வருவதை கடைப்பிடிக்கும் இவர் பிறந்த ஊரைச் சுற்றியுள்ள ஊராட்சிகளான ஆலமழை, சின்னத்தூம்பூர், கிராமத்துமேடு பாலக்குறிச்சி, ஓட்டத்தட்ட உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று  நாகைமாலி-க்கு கடந்த 10 நாட்களாக தள்ளாத வயதிலும் தனதுமிதிவண்டியை பிரச்சார வாகனமாக மாற்றி தன்னம்பிக்கை நிறைந்தவராய், சிறிதும் சோர்வின்றி வாக்கு சேகரித்துஇடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கிறார்.
பரபரப்பாக மிதிவண்டியில் சுழன்று சென்று வாக்குச்சேகரிக்கும் மூத்த தோழர்எம்.மணி உற்சாகம், உழைப்பு, உணர்வு, தன்னம்பிக்கை என எல்லா அடையாளங்களையும் கொண்டவராய் கீழ்வேளூரை சுற்றிச்சுற்றி வந்து செங்கொடியின் சின்னத்திற்கு  வாக்குச் சேகரிப்பதுஆச்சரியமல்ல.. கம்யூனிஸ்ட்களுக்கே உரிய சிறப்பு... 

 செ.ஜான்சன்