election2021

img

30 கி.மீ. தூரம் நாகைமாலிக்கு வாக்குச் சேகரித்த மாற்றுத்திறனாளிகள்...

கீழ்வேளுர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலி அரிவாள்- சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஒவ்வொரு நாளும்அந்தத் தொகுதியில் உள்ள தன்னார்வலர்கள், பெண்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் தானாக முன்வந்து ஒவ்வொரு வீதிகள் மற்றும் வீடுகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நாகை மாவட்ட துணைத் தலைவர் சிக்கந்ந்தர் தலைமையில் மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா பங்குபெற்ற 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாகனம் மூலம் கீழையூர் ஒன்றியத்தில் தொடங்கி கீழையூர், திருமணங்குடி, மேலபட்டறை, பாலக்கரை, திருக்குவளை, வலிவலம், சாட்டியக்குடி, கில்லுகுடி, வெண்மணி, தேவூர், கீழ்வேளூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக 30 கிலோமீட்டர் தூரம் அனைவரும் பேரணியாக சென்று நாகைமாலிக்கு வாக்குச் சேகரித்தனர். 

மேலும் வரும் வழியெல்லாம் பொதுமக்கள், வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் பதித்த துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கீழ்வேளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்துக் கூறி பேரணியை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வி.பிரமிளா, திமுக பேரூர் கழக செயலாளர் அட்சயலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளுர் ஒன்றியச் செயலாளர் அபூபக்கர், நாகை ஒன்றியச் செயலாளர் பகு, சிபிஐ நாகை மாவட்டச் செயலாளர் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணியை கீழையூரில் விதொச நாகை மாவட்டச் செயலாளர் முருகையன் துவக்கி வைத்தார்.