புதுதில்லி:
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஏபிபி- சிவோட்டர் (ABP - CVoter) நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில், பாஜக கூட்டணியின் செல்வாக்கு சரிவுப் பாதையிலும், காங்கிரஸ் - இடதுசாரிகள், போடோலாந்து மக்கள் முன்னணி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை உள்ளடக்கிய கூட்டணிக்கு மக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
அசாமில் 64 முதல் 72 இடங்கள் வரை பிடித்து, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதுடன், அந்தக் கூட்டணி 45 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையிலானவாக்கு வித்தியாசம் வெறும் 2 சதவிகிதமாகவே இருப்பதையும் ஏபிபி நிறுவனம் படம்பிடித்துள்ளது.கடந்த தேர்தலில் 31 சதவிகித வாக்குகளைப் பெற்றகாங்கிரஸ் கூட்டணி இந்த முறை கூடுதலாக 11 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த முறை 43 இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணி இம்முறை கூடுதலாக 52 முதல் 60 வரை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அதாவது, பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்பில்லை, இழுபறி நிலை ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிப்பதுடன், மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என மூன்றுகட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பிருப்பதையும் வெளிச்சம் போட்டுள்ளது.