கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில், இரண்டாம் கட்டவாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பாஜகவேட்பாளரின் வாகனத்திலிருந்து பொதுமக் கள் மீட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், முழுக்க முழுக்கபாஜகவினரே மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்களை வாகனத்தில் எடுத்துச் சென்றது அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் அசாம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு, வியாழனன்று 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு நடந்தது.இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகின.இதனிடையே, அசாம் மாநிலம் கரிம் கஞ்ச் என்ற பகுதியில் இரவு 10.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வெள்ளை நிற வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்ததைப் பார்த்த உள்ளூர் மக்கள்,அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட வாகனம் மட்டும் சிக்கியது. உள்ளே பார்த்தபோதுதான், அத்தனை வாக்குப் பதிவு இயந்திரங்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது தெரியவந்தது.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்களைஏற்றிவந்த ‘AS 10B 0022’ என்ற எண் கொண்டவாகனம் பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளரும் - நடப்பு எம்எல்ஏ-வுமான கிருஷ்ணேந்து பாலின் மனைவிக்குச் சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டது. இப்போதும்பதர்கண்டி தொகுதி எம்எல்ஏ-வாக கிருஷ்ணேந்து பால்தான் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்நிலையில்தான், பாதுகாப்புப் படை வீரர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள்யாரும் உடன் வராத நிலையில், பாஜகவினரே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஏற்றி வந்ததை அறிந்த பொதுமக்கள்,இதனால் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து, உள்ளூர்காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து வாகனத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீட்டுள்ளனர்.
பொதுவாக, மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரத்தில் பாஜக முறைகேடு செய்கிறது; வாக்குப்பதிவு பெட்டிகளை மாற்றுகிறது; தேர்தல் ஆணையமும் அதற்குத் துணைபோகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பிவரும் நிலையில்,அந்த குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த தேர்தல் ஆணையம் சமாளிப்பு வேலையில் இறங்கியுள்ளது.அசாம் விவகாரத்தில், கவனக் குறைவுடன் செயல்பட்ட 4 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதாகவும், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் சமாளித்துள்ளது. அதேநேரம், மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பாஜக வேட்பாளரின் வாகனத்திற்கு எப்படி போனது? என்பதற்கு நூதனவிளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. ‘வாக்குப்பதிவு பெட்டிகளை எடுத்துச் சென்ற அரசு வாகனம் திடீரென பழுதடைந்து விட்டது. இதனால் சாலையில் வந்த வாகனத்தில் லிப்ட் கேட்டு, அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர். ஆனால், பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்ததற்குப் பிறகே அது பாஜக வேட்பாளரின் வாகனம் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்’ என்று சமாளித்துள்ளது.
உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தபோது, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூட இல்லை.அதேபோல காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் வாகனத்துடன் வரவில்லை. வாகனம் பழுதடைந்தால் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பது விதி. இதன்படி வேறொரு வாகனத்திற்கும் காத்திருக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, அல்லது அதற்கு பதிலளிக்காமல் தேர்தல் ஆணையம் தப்பித்துள்ளது.
****************
தொடர்ந்து கேள்விக்குறியாகும் தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை.. சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி கண்டனம்
அசாமில் பாஜக வேட்பாளரின் வாகனத்திலிருந்து மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் மீட்கப்பட்டது தொடர்பான சம்பவத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அசாமில் பாஜகவினரால் இப்படித்தான் வெல்ல முடியும்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தகவுரவ் கோகோயும், பாஜக-வின் மோசமான நோக்கங்களால் ஜனநாயகத்தின் நிலை மோசமாகி இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். “தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மீது கேள்விக்குறிகள் எழுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஜனநாயகத் தீர்ப்பை மறுதலிக்கும்விதத்தில் மோசடிகள் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் மக்களுக்கு உறுதியளிப்பதில் மீண்டும் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே,தேர்தல் ஆணையம், பாஜக வேட்பாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து அவரைத் தகுதி நீக்கம் செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.