election-2019

நதிகள் இணைப்பும் மத்திய, மாநில அரசுகளும்

தேர்தல் கால வாக்குறுதியாக மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர்களும் பல அறிவிப்புக்களையும். திட்டங்களையும் அள்ளி வீசுகிறார்கள். தேர்தல் வாக்குறுதியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி 21-1-2019 அன்று ஆந்திர மாநிலம் அமராவதியில் விரைவில் கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். கோதாவரி, பெண்ணையாறு, காவிரி ஆகிய நான்கு நதிகளையும் இணைத்தால் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப்பங்கீடு பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். அதேபோல் இம்மாதம் 29ந்தேதி மயிலாடுதுறையில் தமிழக முதல்வரும், கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். நேருவின் அமைச்சரவையில், நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் அறிவித்த தென்னக நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்ந்து நாம் வற்புறுத்தி வந்த திட்டம். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவிரி, வைகை உள்ளிட்ட ஆறுகளை இணைக்க வேண்டுமென்பதாகும். நிதின் கட்காரி அறிவித்த திட்டத்தில் மகாநதியை சேர்க்கவில்லை. ஏன் சேர்க்கவில்லையென்று தெரியவில்லை? அதையே தமிழக முதல்வர் பழனிசாமியும் அறிவித்துள்ளார். நிதின் கட்காரியும், பழனிசாமியும் இதுவரை நதிகள் இணைப்பை பற்றி ஒரு போதும் பேசியது இல்லை. இப்போது தேர்தலுக்காக பேசுகிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய பாஜக அரசு, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கோதாவரி - காவிரி இணைப்பு பற்றி பேசுகிறது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தப் போராடாத எடப்பாடி அரசு இந்த விஷயத்தில் ஒத்தூதுகிறது.நடைபெற உள்ள தேர்தலில் மத்திய பாஜக அரசையும், மாநிலத்தின் அதிமுக அரசையும் ஆட்சிக்கு வரவிடாமல் விரட்டியடிப்போம்.வரவிருக்கிற ஆட்சி நல்லாட்சியாக அமையும். அப்போது நமது கோரிக்கையான மகாநதி துவங்கி,வைகை வரை நதிகள் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு ஆட்சிகளையும் விரட்டியடிப்போம்.


வே.துரைமாணிக்கம்/ நன்றி: ஜனசக்தி (2019 ஏப்ரல் 7-13)

;