election-2019

img

புதிய வாக்காளர்கள் விலை போக மாட்டார்கள்

மோடி அரசு, தமிழக மக்கள் எதை வேண்டும் என்று கேட்கிறார்களோ அதை கொடுக்க மறுத்தது. வேண்டாம் என்று சொல்வதை திணித்தது. பாஜக ஆட்சியில் விவசாயிகளோ, தொழிலாளர்களோ, தலித் மக்களோ, மீனவர்களோ யாரும் வளர்ச்சியடையவில்லை. அம்பானிகளும் அதானியும்தான் வளர்ச்சியடைந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்குடைய பாஜகவையும், அதற்கு சேவகம் செய்யக்கூடிய அதிமுகவையும் அகற்றுவதுதான் அனைத்து ஜனநாயக சக்திகளின் முதல் கடமை என்கிறார் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை.திருவள்ளுவன்.


வளர்ச்சி என்ற கவர்ச்சிகோஷத்துடன் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள்எதையும் மோடி நிறைவேற்றவில்லை. பெட்ரோல்,டீசல் விலை,எரிவாயு சிலிண்டர் விலை பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் மிகவும் உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாலும் வேலையின்மையாலும் ஏழை எளிய,நடுத்தர மக்கள் அனைத்து நிலையிலும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.


பாஜக ஏன் தங்களது ‘சாதனைகளை’ சொல்ல முடியவில்லை


மோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து பேசுவதில்லை. ஏனென்றால் ஜிஎஸ்டி வரி விதிப்புமக்களை பாதித்திருக்கிறது என்பது அவருக்கு தெரிந்ததால்தான் அதுகுறித்து பேசாமல் இருக்கிறார். ஆட்சியிலிருந்த மோடி அரசு தனது சாதனைகளை சொல்லி ஏன் ஓட்டு கேட்கவில்லை? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கல்விக்கொள்கை, நீட் தேர்வு ஆகியவைகளை சொல்லி ஏன் ஓட்டு கேட்கவில்லை. இவையெல்லாம் மக்களை பாதித்திருக்கிறது என்பதால் பிரச்சாரத்தில் சொல்ல மறுக்கிறார்கள். வளர்ச்சி என்று எதைக் கூறினீர்களோ, அதையெல்லாம் ஏன் இந்த தேர்தலில் பேசவில்லை? பாஜகவின் பேச்சும் நடைமுறை செயல்பாடும் முரண்பாடாக உள்ளது. 


ஹிட்லர் பாணி மோடி


மோடி ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கருத்துக்களை திணிக்கக்கூடிய வகையில் பள்ளி புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. குலக்கல்வி முறையை திணிக்கப் பார்க்கிறார்கள். என்ன உண்ணவேண்டும் என்பதை முடிவு செய்வது,மாட்டுக்கறிக்கு தடைவிதிப்பது, மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக முஸ்லிம்கள்,தலித் மக்கள் மீதுதாக்குதல் நடத்துவது என பாஜக ஆட்சியில் பல கொடூரச் செயல்கள் நடந்துள்ளன. இதற்கு எதிராக குஜராத்தில் தலித் மக்கள்பெருந்திரளாக கலந்துகொண்ட உனா எழுச்சி நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசை அகற்ற முக்கியப் பங்காற்றுவார்கள். விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வு நடத்தப்படாது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். பாஜகவை அகற்றுவதற்கு அதன் தேர்தல் அறிக்கையே போதும். காஷ்மீருக்குரிய சிறப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று கூறியிருப்பது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. பல்வேறு இனங்கள்,பல்வேறு மொழிகள்,பல்வேறு கலாச்சாரங்களுடைய பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில், ஒற்றை மொழி,ஒற்றைக் கலாச்சாரம்,ஒற்றை பண்பாடு,ஒரே மதம் என்று கூறுவது முழுக்க முழுக்க பாஜகவின் சர்வாதிகாரப்போக்குதான். மதச்சார்பற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளாத பாஜக, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தப் பார்க்கிறது. ஹிட்லர் பாணி ஆட்சி முறையைத்தான் பாஜகவும் மோடியும் பின்பற்றுகிறார்கள்.இந்திய மக்களின் மனநிலை மோடிஅரசுக்கு எதிராக உள்ளது. எனவே இந்த தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்படும். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். 


துப்புரவுத் தொழிலாளியைப் பற்றி என்ன தெரியும் மோடிக்கு?


துப்புரவுத்தொழிலாளர்களின் கால்களை கழுவிவிட்ட மோடிக்கு, அவர்களின் வாழ்க்கை நிலையை பற்றி தெரியுமா? கேரளாவில் பினராயி விஜயன் அரசு, மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரத்தை பயன்படுத்துகிறது. இதுநூற்றுக்கு நூறு வரவேற்க வேண்டியநடவடிக்கை. இதனை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். செப்டிக்டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டு இறந்த துப்புரவுத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களைப் பற்றி மோடி பேசியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? துப்புரவுத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு ஏதாவது திட்டம் கொண்டுவந்ததுண்டா?துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. பல கட்ட போராட்டத்திற்குப் பின்னர் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதுவரை இந்தியாவில் எங்கும்வழக்குப் பதிவு செய்யவில்லை. ஏனென்றால் சட்டத்திற்கான விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இதனால் வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. விதிகள் உருவாக்க பாஜக அரசு என்னநடவடிக்கை எடுத்தது?ஒன்றும் செய்யவில்லை. அப்படியெனில் தொழிலாளர்கள் மீது பாஜக அரசுக்கு அக்கறையில்லை என்றுதான் அர்த்தம். கால்களை கழுவிவிட்டால் மட்டும் அவர்களின் வாழ்க்கை நிலை மாறாது.


விஷவாயு தாக்கி இறந்தால் 10 லட்சம்ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆனால் எந்த மாநில அரசும் இந்த இழப்பீட்டை வழங்கவில்லை.உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் இந்நிலையே தொடர்கிறது.புதிய வாக்காளர்கள் அரசியலை உற்றுநோக்கி கவனிக்கிறார்கள். இவர்கள் பணத்திற்கு விலைபோகமாட்டார்கள். சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள். சாதியவாதத்தை - மதவாதத்தை புறக்கணிப்பார்கள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத, தலித் விரோத நடவடிக்கைகளை பிரச்சாரத்தில் கொண்டுசென்றாலே போதும், வெற்றி இந்த அணிக்குத்தான். மதுரை மக்கள் மீதும் மண் மீதும் நேசமாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன். மதுரை மக்களின் பிரச்சனைகளை உள்வாங்கியுள்ளார். எவ்வளவுபணத்தை ஆளும் தரப்பு வாரியிறைத்தாலும் சு.வெங்கடேசன் வெற்றி பெறுவது உறுதி.


சந்திப்பு : எஸ்.உத்தண்ட்ராஜ், பா.ரணதிவே





;