election-2019

எத்தனை எஜமானர்கள்?

மக்கள் தான் எனக்கு எஜமானர்கள் -பிரச்சாரக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு


மாலை மலர் (15.04.2019)


தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு வினாடி நமக்கும் சிலிர்த்துத் தான் போகிறது.திருவாளர் ஓபிஎஸ் தினகரனை எஜமானராக ஏற்றுக் கொண்டதால் தான் 2001-லேயே இடைக்கால முதல்வராகச் சில மாதங்கள் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இப்போது சமீபத்திய நிகழ்வுகளுக்கு வருவோம்.ஜெயலலிதா மறைந்தவுடன் இரவோடு இரவாக, கண்ணீர் மல்க முதலமைச்சர் பதவியை ஏற்ற ஓபிஎஸ், ஓரிரு நாட்களில் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஜெ., படத்தைத் தூர எறிந்துவிட்டு, புதிய எஜமானர் சின்னம்மா படத்தைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்துக்கு வர ஆரம்பித்தார்.முதலமைச்சர் பதவியிலிருந்து ஓபிஎஸ் வெளியேறியதும், இவரை வைத்துக்கொண்டு அதிமுக-வை உடைத்துவிடுவது என்று பாஜக திட்டமிட்டதும், மத்திய அரசு எத்தனையோ உதவிகள் செய்தும் பன்னீரால் 10 எம்எல்ஏக்களைக் கூடத் திரட்ட முடியவில்லை என்றதும் மோடி குரூப் இவரைக் கழற்றிவிட்டு எடப்பாடியை கார்னர் செய்ததும் எல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிந்த விறுவிறுப்பான சீரியல் நிகழ்வுகள்.


திடீரென்று ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இணைந்ததும், பார்ட்-டைம் கவர்னர் வித்யா சாகர் ராவ் மேலிட உத்தரவுப்படி இருவர் கைகளையும் பற்றிக்கொண்டு சேர்த்து வைத்ததும் சீரியலின் அடுத்த காட்சி. புதிய எஜமானர் மோடி கட்டளையிட்டதால் தான் இணைந்தேன் என்று ஓபன் டாக் கொடுத்தார் ஓபிஎஸ்.இடையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிறைக்குப் போய் பழுத்த அனுபவம் பெற்ற தன் தம்பிக்காக இராணுவ விமானத்தை அனுப்பி தேசநலனுக்குப் பாடுபட்ட நிர்மலா சீத்தாராமனுக்குத் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட இவர் தில்லிக்குப் போனதும், அங்கே அம்மையார் இவரை வெளியிலேயே உட்கார வைத்துவிட்டு சந்திக்க மறுத்துவிட்டதும், செய்தியாளர்கள் இதைப்பற்றிக் கேட்டவுடன் ‘‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’’ என்று அண்ணா சொல்லியிருக்கிறார் என்று பேட்டியளித்து, பேரறிஞர் அண்ணாவையே அவமதித்ததும் தனி எபிசோடுகள்.


இப்போது எஜமானர் மோடிக்காக, அவரது அமைச்சர் பெருமக்கள் நிதின் கட்காரியும், பியூஷ் கோயலும் தமிழகத்திற்கு எதிராக என்ன பேசினாலும் மௌனம் சாதிப்பது என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார்கள் பன்னீரும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும்.தேர்தலில் மோடி தூக்கி எறியப்பட்டவுடன் இவர்கள் புதிய எஜமானர்களைத் தேடுவார்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். நாற்பது தொகுதிகளிலும் இவர்களைத் தோற்கடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.


க. மன்னன்


;