election-2019

வளர்ச்சி உண்மைதான்... வேலை இழப்பில்..!

செத்தவன் வாயில் போட்ட அரிசிக்கு என்ன பயன்? அதுவேதான் மோடியின் வாக்குறுதியும். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, 5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் சேரும் ஈபிஎஃப் கணக்கை வைத்து ஐந்தாண்டு களில் 77 லட்சம் பேருக்கு வேலை தந்ததாக மோடிஅரசு கணக்கு காட்டுகிறது. இது மோசடிக் கணக்குஎன்று பொருளாதார நிபுணர்கள் புரிய வைத்துள்ளனர். அப்படியே இருக்கட்டும். 77 லட்சம் எங்கே? 10 கோடி எங்கே?ஆண்டுக்கு ஒரு கோடியில் இருந்து 1 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக வேலைதேடி வேலை சந்தையில் நுழைகிறார்கள். உலக மயத்தால் வேலையற்ற வளர்ச்சி இருந்ததாகவும் மோடி ஆட்சியில் வேலையிழப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ள தாகவும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 


இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) என்ற அமைப்பு 2011-12 முதல் 2017-18 வரையான காலத்தில் 3.2 கோடி தற்காலிகஊழியர்கள் வேலை இழந்ததாக கூறுகிறது. இதனால் 1.5 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 2018 இல் மட்டும் 1 கோடியே 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக அதே அறிக்கை கூறு கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மோடி ஆட்சியில்கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது என்று அது கூறுகிறது.இந்தியாவில் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் மதிப்பின்படி 49.8 கோடி பேர் வேலை செய்ய தகுதி உடைய ஆட்கள் ஆகும். இதில் 7.2 சதவீதம் அதாவது 4.58 கோடிப் பேர் வேலையில்லாப் பட்டாளம் என்று சிஎம்ஐஇ கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தேசிய மாதிரி கணக்கெடுப்பின் கசியவிடப்பட்ட புள்ளி விவரம் கூறுகிறது. அதன்படி 2011-12 இல் 2.2 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 இல் 6.1 சதவீதமாகி விட்டது. அதாவது 2011-12 இல் ஒரு கோடிப் பேர் வேலையில்லாமல் இருந்தார்கள். 2017- 18 இல் அதுவே 3 கோடிபேராகிவிட்டது. இப்படி திடீரென வேலையின்மை அதிகரிக்க பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் தான் காரணம். முதலாளிகளும் தொழிலாளர்களாக வேலையில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் கூடகடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தபடி 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் தமிழகத்தில்மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒருமாநிலத்திலேயே இப்படி என்றால் நாடு முழுவதும் எப்படி இருக்கும்? பார்த்துக் கொள்ளுங்கள்.


அண்மையில் ரயில்வே கடைநிலை வேலைக்குவிண்ணப்பித்துள்ளவர்களின் கணக்கைப் பார்த்தால்வேலையின்மையின் கொடுமை புரியும். 62ஆயிரத்து 907 கடைநிலை ஊழியர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வித்தகுதி. மொத்தம் 1.89 கோடிப் பேர்இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் பட்டதாரி களும் பட்டமேற்படிப்பு படித்தவர்களும் மட்டும் 89 லட்சம் பேர். இவர்களில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள். 40,751 பேர் எம்டெக் படித்தவர்கள். 19.1 லட்சம் பேர் இளங்கலைப் பட்டதாரிகள். 3.83லட்சம் பேர் முதுகலைப் பட்டதாரிகள். 9.57 லட்சம் பேர்இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்கள். 1 லட்சத்து 27 ஆயிரத்து 18 பேர் அறிவியலில் பட்டமேற்படிப்பு படித்தவர்கள்.இந்த லட்சணத்தில்தான் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதமாம். மோடியின் வளர்ச்சி யாருக்கு? தேசத்தின் மொத்த உற்பத்தியில் மக்கள் தொகை யின் உச்சாணி 1 சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2014 இல் 49 சதவீதம். 2018 இல் அது 73 சதவீத மாக உயர்ந்துள்ளது.ஒருபக்கம் அதிகரிக்கும் வறுமை, வேலையின்மை, மறுபுறம் கார்ப்பரேட்டுக்களின் அபரித வளர்ச்சி. இன்னொரு புறம் விவசாயிகள் 1.5 கோடி பேர் நிலமிழந்து வேலை தேடி நகர்ப்புறத்திற்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்த அவலநிலையை உருவாக்கிய மோடி ஆட்சி மீண்டும் வரவேண்டுமா?


ஆர்.இளங்கோவன்

;