election-2019

img

ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டோர் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவரா?

கோவை, ஏப்.6-


சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவர்கள்தான் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்ற கோவை தொகுதிபாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பல்வேறு தொழில் துறையினர், தொழில்முனைவோர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 17 ஆவது மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியின் மீதானஎதிர்ப்பலை மக்களிடம் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக, வேலையின்மை அதிகரிப்பும், இருக்கிற வேலையையும் பறித்தது போன்ற நடவடிக்கைகள் இத்தேர்தலில்பிரதானமாக எதிரொலித்து வருகிறது. இது பாஜகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் வளர்ச்சி என்கிற மோடியின் முழக்கத்தை நம்பி வாக்களித்தவர்கள் தற்போது மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் கடும் அதிருப்தியுள்ளாகி உள்ளனர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற நடவடிக்கைகள் கோவையில் ஒட்டுமொத்த சிறு, குறு தொழில்களை படுபாதாளத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட்கட்சியின் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். மக்களோடு மக்களாகதொழிற்சங்க பணிகளை மேற்கொண்டு வரும் பி.ஆர்.நடராஜன்,ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஏற்படுத்திய தாக்கம், தொழில்நசிவு, தொழிற்கூடங்கள் மூடல் ஆகியவைகளை நன்றாக அறிந்துள்ளார். இதன் ஒருபகுதியாகவே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கோவைதொழில் மாவட்டம், தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டம், அமைதி இருந்தால்தான் வளர்ச்சிசாத்தியம். நான் அமைதிக்கான வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் முதல் வாக்குறுதியாக ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி அறவே கூடாது என்றும், உற்பத்திசெய்யப்பட்டு முழுமையடைந்த பொருட்களுக்கு மட்டும் குறைந்த பட்ச ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்ற வாக்குறுதியைஅளித்து வருகிறார். இது கோவையில் உள்ள அனைத்து தரப்பு சிறுகுறு தொழில்முனைவோரிடமும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெளிப்படையாக தொழில்முனைவோர் சங்கங்கள் பி.ஆர்.நடராஜனுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இதனை எதிர்கொள்ளும் வகையில், தற்போது மீண்டும் மோடி ஆட்சி வந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைப்போம் என்று வாக்குறுதியளித்தார். அதேநேரம், குறைப்பது இருக்கட்டும். குஜராத்தில் தயாரிக்கும் கிரைண்டருக்கு 5 சதம் வரி, தமிழ்நாட்டில் தயாரிக்கும் கிரைண்டருக்கு 18 சதம் வரி என்பது என்ன வகையிலான ஓரவஞ்சனை. பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே கார்ப்பரேட்டுகளுக்காக சிறு, குறு தொழில்களை அழிக்க நினைப்பதா என்கிற எதிர் பிரச்சாரத்திற்கு பதில் தெரியாத சி,பி.ராதாகிருஷ்ணன், தற்போது விஷமத்தை கக்க துவங்கியுள்ளார்.சமீபத்தில் தினசரி நாளிதழ் ஒன்றில், சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள்தான் ஜிஎஸ்டியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தனதுபேட்டி ஒன்றில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது சிறு குறுந்தொழில் செய்வோர் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டவிரோதமாக தொழில் செய்யும் எங்களிடம் எதற்கு அடுத்து ஆட்சிக்கு மோடிவந்தால் ஜிஎஸ்டியை குறைப்போம் என சொல்லுகிறார். இவர் தலைமையில் பல நாட்கள் பல மணிநேரம்காத்திருந்து மத்திய அமைச்சரிகளிடம் அதிகபட்ச ஜிஎஸ்டி வரியால் எங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கோரிக்கையை அளித்தோமே அப்பொழுதெல்லாம் நாங்கள் சட்டவிரோத தொழில்செய்வோர் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் என்னினாரா என கடுமையாக கேள்விகளை எழுப்பதுவங்கியுள்ளனர். (ந.நி)

;