election-2019

img

மோடியை தோல்வி பயம் ஆட்டிப்படைக்கிறது -பிரகாஷ் காரத்

கோவை, ஏப்.15-

      தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் தோல்வி பயம் அட்டிப்படைக்கிறது. அதனால்தான் பல இடங்களில் அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.

      மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று கோவை சிங்காநல்லூரில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் இரா.க.குமரேசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய பிரகாஷ் காரத் மேலும் பேசியதாவது: இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. நமது அரசியல் சட்டம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதை அமல்படுத்துவோர் மோசமாக இருந்தால் எந்த நன்மையும் ஏற்படாது, என்று அவர் கூறினார். இன்றைக்கு அந்த அரசியல் சட்டத்தை குழி தோண்டி புதைக்க விரும்பும் பாஜகவினரிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. அவர்களை தூக்கி எறிந்துவிட்டு இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. 


மனுஸ்மிருதியை சட்டமாக்க முயற்சி


      கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அனந்த குமார் ஹெக்டே இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படுபவர். அந்த அமைப்பு தேசியக் கொடியின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் மதிப்பு கொண்டவர்கள் அல்ல. 1951இல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதிதான் இந்தியாவின் சட்டமாக இருக்க வேண்டும் என்று கூறினர். அதை மோடி அரசு அமல்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது. 

      நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் மக்களிடையே மதத்தின் பெயரால் பிளவை உருவாக்கிட பாஜக முயன்று வருகிறது. சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்கண்டில் பசுக்குண்டர்களால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது 47ஆவது கும்பல் கொலையாகும். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைவரும் சமமாக வாழும் உரிமையை இன்று பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் அழிக்க முயல்கின்றன.

      தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும்கூட தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் பல இடங்களில் மதரீதியான பிளவுக் கருத்தை கூறி வருகிறார்கள். இந்தியாவை பாதுகாக்கும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளதாக கூறுகிறார்கள். ஏனென்றால் கடந்த ஐந்தாண்டுகளில் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, மக்களிடம் பீதியை கிளப்பி வருகிறார்கள். 


நிறைவேற்றாத வாக்குறுதிகள்

      2014 மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் வேலையின்மையைத்தான் உருவாக்கியுள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது என்கிற அரசின் புள்ளிவிவரத்தையே வெளியிடவிடாமல் தடுக்க முயன்றனர். 2018ஆம் ஆண்டு மட்டும் ஒரு கோடியே பத்து லட்சம் வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மட்டும் 88 லட்சம் பேர். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல கோவையில் வசிக்கும் உங்களது சொந்த அனுபவம்கூட. இங்கு ஆயிரக்கணக்கான தொழில் கூடங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் மக்களது பொருளாதார வளர்ச்சி மீது மிகப்பெரும் தாக்குதலை மோடி அரசு மேற்கொண்டது. 

      மற்றொரு வாக்குறுதி நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்வது. அது நிறைவேற்றப்படாததால் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் கடனில் சிக்கிய லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தனர். இப்போது ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதாக மோடி அரசு அறிவிதுள்ளது. அதன்படி சொற்பத் தொகையாக தினம் ரூ.17 மட்டுமே கிடைக்கும் இந்த அறிவிப்பே விவசாயிகளை பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டதற்கான ஒப்புதல்தான். 

      மோடி தனது சாதனையாக தனது ஆட்சியில் ஒரு ஊழல்கூட இல்லை என்கிறார். ஆனால், மிகப்பெரிய ஊழல் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் நடந்துள்ளது. பிரான்ஸ் அரசை நிர்ப்பந்தித்து இந்திய பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்க்கு கிடைக்க வேண்டிய ரபேல் ஒப்பந்தத்தை தனது நண்பர் அம்பானிக்கு பெற்றுத்தந்துள்ளார். இதன் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் முன் அனுபவம் ஏதும் இல்லாத அம்பானிக்கு 13ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க உதவியுள்ளார். மோடி மதக்கலவரங்களை நிகழ்த்துவதில் மட்டுமே சாதனை படைத்துள்ளார்.


மோடி, இபிஎஸ் அரசுகளை தூக்கி எறிய...


      பாஜகவினரும் மோடியும் ஆர்எஸ்எஸ்இன் பாசிச முழக்கங்களை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சியாக தமிழை பின்னுக்கு தள்ளி இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு, ஒரே தலைமை என்கிற முழக்கத்தை முன்வைக்கின்றனர். இதை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசு பாஜகவிடம் சரணடைந்துள்ளது. தமிழ் மொழி, வரலாறு, கலாச்சாரம், அழிக்கப்படுவது குறித்து கவலைப்படாத இந்த அரசை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

      மத்திய அரசு தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாத கோழையாக இபிஎஸ் அரசு உள்ளது. பணமதிப்பு நீக்கத்தின்போது மக்கள் கால்கடுக்க வரிசையில் நின்றார்கள். அதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் கேரள மக்களுக்காக அங்குள்ள முதலமைச்சர் பினராயி விஜயனும் அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்பிக்களும் ரிசர்வ் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் ஆட்சியாளர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை. எனவே தமிழகம் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் இடங்களிலும் உள்ள வாக்காளர்கள் அதிமுக அரசையும், பாஜக அரசையும் தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் இந்த அணி பாஜகவுடன் நேரடியாக மோதும் 5 தொகுதிகளில் ஒன்று கோவை. இங்கு எத்தனை மத மோதல்களை ஏற்படுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எனவே, அமைதியை விரும்பும் கோவை மக்கள் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என பிரகாஷ் காரத் கேட்டுக்கொண்டார். அவரது ஆங்கில உரையை அன்வர் உசேன் தமிழாக்கம் செய்தார்.

      முன்னதாக, இப்பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

;