election-2019

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது தாக்குதல்

சென்னை, ஏப். 5-


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாழனன்று (04.04.2019) இரவு நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் கி. வீரமணி மற்றும் அவரது கட்சிக்காரர்களையும் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இருவரின் மண்டை உடைந்து படுகாய முற்றுள்ளனர். அதன் பிறகு கி. வீரமணிகாரில் திரும்பி சென்ற போது மீண்டும்அவரது கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே தாக்குதல் நடத்தி யுள்ள பின்னணியில் காவல்துறையினர் உரிய எச்சரிக்கையுடன் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு மாறாக, இந்து முன்னணியினர் தாக்குதலுக்கு வழி செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ள நிலையில், மோடி அரசின் மீதான விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்துத்துவ அமைப்பினர் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவதை தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த தவறியுள்ளன எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் கி. வீரமணி போன்ற மூத்த தலைவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமைஏற்பட்டுள்ளது ஆழ்ந்த கவலை யளிப்பதாக உள்ளது. எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமெனவும், தொடர்ந்து கி. வீரமணி அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

;