election-2019

img

கோமியத்தால் எனக்கு புற்றுநோய் குணமானது என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை மேற்கொண்டது அம்பலம்

கோமியத்தால் எனக்கு புற்றுநோய் சரியானது என்று அறிவியலுக்கு புறம்பாக பேசிய மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் பாஜகவின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்கூர் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது அம்பலமாகி உள்ளது.  

மலேகான் குண்டு வெடிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சாத்வி பிரக்யாவை போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு மாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சாத்வி பிரக்யா, "மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடு சார்ந்த தயாரிப்புகளால் பல நன்மைகள் உள்ளன. மாட்டின் சிறுநீரை அருந்தியதன் மூலம் மார்பக புற்றுநோய் குணமாகி உள்ளது. நான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். கோமியத்தை அருந்தியதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டேன். மேலும் ரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வாக உள்ளது. விலங்குகளில் கழுத்தில் இருந்து பின்பக்கம் வரை தேய்க்கும் போது அது சஞ்சலத்துடன் உணர்கிறது. எனவே மாட்டின் பின்புறத்தில் இருந்து கழுத்துவரை தடவிக்கொடுக்கும் போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது என கூறியுள்ளார் என அறிவியலுக்கு புறம்பான சர்ச்சைக் கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை பொது மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத் ஆரம்ப கட்ட புற்றுநோயால் பிரக்யாசிங் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 3 முறை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2008ல் மும்பை ஜேஜே மருத்துவமனையில் முதல்முதலாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்டேன். அவரது வலது மார்பகத்தில் கட்டி இருந்தது. பின் 2012ல் மீண்டும் கட்டி உருவானது. அதற்கு பிறகு கட்டியோடு சேர்த்து தாக்கூரின் வலது மார்பகத்தில் மூன்றில் ஒரு பங்கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினோம். இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. புற்றுநோய் கட்டி மற்றும் திசுக்கள் மும்பைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு ஸ்டேஸ் 1 புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தது.

2017ல் பிரக்யாவுக்கு ஜாமின் கிடைத்தவுடன் மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அவரின் இரு மார்பகங்களும் அகற்றப்பட்டது.

ஆனால் பிரக்யா தாக்கூருக்கு கீமோதெரப்பியும் ரேடியேஷன் சிகிச்சையும் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மருத்துவர் ராஜ்புத் மறுத்து விட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் கூட வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பிரக்யா வந்தார் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராஜ்புத்தின் விளக்கம் பிரக்யா சிங் தாக்கூர் திட்டமிட்டு கோமியத்தை முன்வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை குழப்புகிறார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.


;