election-2019

img

பாஜகவுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் - திரைப்படத்துறையினர் அறிக்கை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இந்திய திரைத்துறை படைப்பாளிகள் 103பேர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மோடி அரசின் தவறான பொருளாதாரக்கொள்கையால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2014ம் ஆண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கருத்துச்சுதந்திரத்தையும் பல தளங்களில் நசுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டது. 

இந்நிலையில் பாஜகவின் கொள்கைக்கு எதிரான கருத்துகொண்ட இயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் பாஜகவுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர்கள் www.artistuniteindia.com தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது


``நமது நாடு தற்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் நாம் பிரிந்திருந்தாலும், ஒரு நாடாக நாம் இணைந்து இருக்கிறோம். அதுவே இந்த நாட்டின் குடிமகன்களான நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது. 

ஆனால், தற்போது அவையெல்லாம் வெறும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல்படாமல் போனால், பாசிசம் நம்மை கடுமையாகத் தாக்கும். மதரீதியாக நாடு செல்வது என்பது நாம் கேட்டிராத இந்தியா. பா.ஜ.க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் கும்பல் மற்றும் மாட்டு அரசியல் மூலமாகவும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓரங்கப்பட்டுகிறார்கள். இணையதளம் மற்றும் சமூகவலைத்தளம் மூலம் தங்களின் வெறுப்பு அரசியலை அவர்கள் பரப்புகிறார்கள். 

தேசபக்தி என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை தேசத் துரோகிகள் என்பார்கள். தேசபக்தி என்ற ஒன்றைச் சொல்லி, அவர்கள் வாக்குவங்கியை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும், ஊடகவியலாளர்களையும் இழந்திருக்கிறோம். அதனை நாம் மறந்துவிடக் கூடாது. 

ராணுவத்தைப் பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று. தேவையில்லாத போர்மூலம் நாட்டை ஆபத்தில் வைப்பார்கள். தேசிய நிறுவனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத நபர்களைத் தலைமையிடத்தில் அமரவைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். 

விவசாயிகளை மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழிலதிபர்களுக்கு வசதியாக வழங்கியுள்ளது. இவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைத்து, வெற்றி பெற்றதுபோல ஜோடிக்கிறார்கள். பொய்யான பரப்புரைகள் மூலம், இதனை அவர்கள் சாத்தியமாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள், நாட்டில் பொய்யான அல்லது தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

வரலாறு மற்றும் புள்ளியியல்களை அவர்களுக்குத் தேவையானதுபோல மாற்றுவார்கள். இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும். இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு!” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு!” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

103 இந்திய திரைத்துறையினரின் கையொப்பம் இந்த அறிக்கை பாஜக வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 



;