election-2019

img

பண மதிப்பழிப்பு மாபெரும் மோசடி: ரகசிய வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

பண மதிப்பழிப்பு நடவடிக்கையானது பிரதமர் அலுவலகம் மற்றும் அமித் ஷா நடத்திய மிகப்பெரிய நிதி மோசடி என்று காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களைச் செல்லாது என அறிவித்தார். இது நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதன் பாதிப்பிலிருந்து மீண்டுவர மாதக்கணக்கில் ஆனது. இந்த நிலையில் இந்த நடவடிக்கையானது மிகப் பெரிய நிதி மோசடி என்று காங்கிரஸ் கட்சி தற்போது குற்றம்சாட்டியுள்ளது.

பண மதிப்பழிப்பு செய்யப்பட்டபோது பணப்பரிமாற்றம் செய்யும் செயல்பாடுகளில் பிரதமர் அலுவலகமும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தலையிட்டதாக உளவு அமைப்பான ’ரா’ (RAW) அமைப்பைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் ஏப்ரல் 9 அன்று வெளியிட்டனர்.

மிகவும் பரபரப்பான அந்த வீடியோவில் பண மதிப்பழிப்பின்போது ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை வெளிநாட்டில் அச்சடித்து, டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தின் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவந்து அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியதாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்துக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் இந்த முறைகேடுகளில் நேரடி தொடர்பிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த வீடியோவானது மும்பையில் உள்ள ஹோட்டல் ட்ரைடெண்ட்டில் எடுக்கப்பட்டது. அதில் ரகுல் ரதனேகரும், அருகில் அவரது மனைவியும் உள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த நிபுண் சரண் என்பவர் இந்த ஆபரேஷனை ஒருங்கிணைத்தார் என்றும், 26 பேரின் மேற்பார்வையில் இந்தப் பணப் பரிமாற்றக் குழு அமைக்கப்பட்டது என்றும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அமித் ஷாவின் பெயர் இந்த வீடியோவில் இரண்டு இடங்களில் வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “இந்த ஆதாரங்களை உங்கள் தொலைக்காட்சி உரிமையாளர்கள் வெளியிடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வீடியோவானது பல மணி நேரங்களுக்கு ஓடும். ஆனால், பண மதிப்பழிப்பு மிகப்பெரிய நிதி மோசடி என்பதை நிரூபிக்க இதிலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதியே போதுமானது. அந்த சமயத்தில் அமித் ஷா தலைமையில் சிறப்பு அணி ஒன்று அமைத்து பழைய ரூபாய் தாள்களுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுத்தனர். இதற்கு 15 முதல் 40 விழுக்காடு கமிஷன் பெற்றுக்கொண்டார்கள்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு வீடியோ கிளிப்பில், மும்பையில் ஃபோர்ட் பகுதியில் உள்ள இந்துஸ்இண்ட் வங்கியின் மேலாளர் சஞ்சய் ஷானே 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் குடோனில் இந்த ரகசியப் பரிவர்த்தனை நடந்துள்ளது. ரூ.320 கோடி வரையில் புதிய ரூபாய் தாள்களை மாற்ற வேண்டியிருப்பதாகவும் அந்த வீடியோ கிளிப்பில் சஞ்சய் ஷானே கூறுகிறார்.

பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் பின்னால் நடந்த முறைகேடுகளின் முக்கிய நபராக அமித் ஷா இருப்பதாக கபில் சிபல் குற்றம்சாட்டுகிறார். ஆனால், இந்தச் செய்தியைப் பல ஊடகங்கள் வெளியிடவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


நன்றி: மின்னம்பலம்

;