அவிநாசி, ஏப்.5-
அவிநாசி அருகே மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.அவிநாசி அருகே சேவூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று இரவுவாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சேவூரில் இருந்துஅவிநாசி நோக்கி மண் அள்ளி வந்த இரு டிப்பர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அச்சமயம், டிப்பர் லாரியைப் பின் தொடர்ந்து ஒரு காரில் வந்த சேவூர் அருகேயுள்ள முறியாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கெல்லாம் பணம் கொடுத்துத்தான் மண் எடுக்கிறோம் எனக்கூறியதோடு, அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த டிப்பர் லாரிகளையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்களையும் அருண்குமார் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அருண்குமார் மீது சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.