election-2019

img

ஆறாத ரணங்களுக்கு அருமருந்து எது ?

முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதாலேயே கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம். எம். கல்புர்கி , கவுரி லங்கேஷ் சிந்திய ரத்தம்


இந்து சமயத்திற்கு மறுபக்கம் இருக்கிறது என்று சொன்னதாலேயே வெங்கி டோனிகரின் புத்தகங்களைக் கூழாக்கிக் களித்த சங்பரிவாரத்தின் வெறி


ஓவிய படைப்பாளி எம். எஃப். ஹூ`சைனை நாட்டை விட்டே விரட்டிய அவலம் 


மோடியின் மூலதனம் கோயபல்ஸ் பொய்கள் மட்டும் தான் என்பதை முன்னுணர்ந்து அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று சொன்னதற்காகக் கன்னட எழுத்தாளர் யு. ஆர். அனந்த மூர்த்தியை அவமதித்து , மன வேதனைப்பட்டு சாகச்செய்த வன்மம்


பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று வாழும்போதே அறிவிக்கும் அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மாவட்ட அதிகாரியைக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து பேச வைத்த ஆணவம்


இந்தித் திணிப்பை விஞ்சுவதாக ஆட்சியில் அமர்ந்த அடுத்த மாதமே (ஜூன் 30,2014 ) சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளின் தாய் என்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் எல்லாவற்றிலும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆதிக்க வெறியோடு (மநு)ஸ்மிருதி இரானி பிறப்பித்த கட்டளை


மத்திய அரசின் திட்டப் பெயர்கள் தொடங்கி தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்கள் வரை இந்தி, இந்தி என்று திணித்துக்கொண்டே இருக்கும் இறுமாப்பு 


பெரியார் அம்பேத்கர் பெயர்களில் வாசகர் வட்டம் கூட இருக்கக் கூடாது என்று சென்னை ஐஐடி மாணவர்களுக்குத் தடை விதித்த சிந்தனை முடக்கம்


என் உணவு , என் உரிமை என்ற மனித குலத்தின் பொது பண்பாட்டையே நிராகரித்து மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று தடைபோட்ட அராஜகம்


பசுக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி மனிதர்களைக் கொன்ற கொடூரம்.


தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி சிந்தனைகளை வேரோடு அழிக்க சங்பரிவார் மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் கன்னையா குமார், உமர் காலித் ஆகியோருக்கு எதிராக அநியாய வழக்கு


வழக்கறிஞர்கள் என்ற போர்வையில், நீதிமன்ற வளாகத்தில் கன்னையாகுமாரின் விதைப்பைகளை முழங்கால் முட்டியால் நசுக்கி வதைத்த கொடூரம்


ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட தலித் மாணவர் ரோ`ஹித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தூண்டிய (மநு)ஸ்மிருதியின் கயமை


தாலி பற்றிய விவாதம் நடைபெறும் என முன்னோட்டம் போட்ட உடனேயே "புதிய தலைமுறை" தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசி, தலைமை நிருபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அக்கிரமம்


நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலமாக சன் தொலைக்காட்சியில் நடத்தி வந்ததால் சன் திரு. வீரபாண்டியன் என்றே தமிழகம் அறிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சின்னத் திரைக்கு முன்னால் வரவே கூடாது என்று நிர்வாகத்தை மிரட்டிப் பணிய வைத்த அராஜகம்


சிந்து சமவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் பலர் சான்றுகள் காட்டி நிறுவினார்கள். ஆனால் காளையைப் பசுவென்றும் தமிழ் பிராமியை சமஸ்கிருதம் என்றும் திரித்து வந்தவர்க

ளுக்குப் பேரிடியாய் இறங்கியது கீழடி


சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தையதாய் வைகை நதி நாகரிகம் இருந்துள்ளது என்று வெளிப்படுத்தியதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அகழ்வாய்வையும் குழிதோண்டிப் புதைத்த முனைப்பு



தொல்லியல் துறை இயக்குனராக இந்தப் பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றிய வக்கிரம்


அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கீழடி பற்றி அவர் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே விசா முடக்கிய மோடி அரசின் நிர்வாக சண்டியர்த்தனம்


மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படும் தமிழக ஆளுநர் மீது பாலியல் புகார் கூறும் அளவுக்கு நீதிமன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வழக்கு பற்றி செய்தி வெளியிட்டால் அது அவரின் பணியை முடக்குவதாகும் என்று சுதந்திர இந்தியாவின் பத்திரிகை சுதந்திர வரலாற்றில் கரும்புள்ளியாக குற்றவியல் சட்டத்தின் 174 - ஆவது பிரிவை முதன்முறையாக நக்கீரன் கோபால் மீது ஏவிய சர்வாதிகாரம்


தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தாமே விசாரணைக் குழுவை அமைத்துக் கொண்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் . அதற்கான செய்தியாளர் கூட்டத்தில் பாலியல் தொடர்பான விசாரணைக் குழுவில் பெண் ஒருவர் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்திய பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டி பல்லிளித்த ஆளுநரின் அநாகரிகம்


பெண் பத்திரிகையாளரை மேலும் இழிவுபடுத்திய பாஜக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.வி.சேகர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவர் சுற்றி வரும் இடங்களிலெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுத்த எடப்பாடி அரசின் கையாலாகாத்தனம்


ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தை மீட்பதற்கு எழுச்சியோடு திரண்டிருந்த மக்களை விரட்டி அடித்தவர்கள் இப்போது வீடு தேடி வருகிறார்கள் . அவர்களுக்கு எதிராக வாக்களித்து விரட்டியடிக்கும் நாள்தான் 18-4-2019. 


கடந்த 5 ஆண்டுகளாகப் படைப்பாளிகளுக்கு, பத்திரிகையாளர்களுக்கு,  மாணவர்களுக்கு, பெண்களுக்கு, பொதுமக்களுக்கு பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கூட்டம் ஏற்படுத்திய ஆறாத ரணங்களுக்கு அருமருந்துதான் வாக்குச்சீட்டு.


பட்டோம் படாத துயரம் இனிப்பட முடியாது எங்களால் என ஒட்டுமொத்தமாக மாற்றம் காண மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் மக்களவையை நிறைக்க வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயம்.