election-2019

img

பிரதமர் மோடி திரைப்படத்தை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை

மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை திரையிடுவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 


மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில்  மோடி படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என அனைத்து எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், வலியுறுத்தினர். 


இந்நிலையில், “பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெற வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ‘பிரதமர் நரேந்திர மோடி’ படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

மோடியின் படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ்கூட பெறாத நிலையில் இது பற்றி முடிவு செய்ய முடியாது.மேலும் “மனுதாரர் மோடி படம் குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடமே முறையிடலாம்.” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 11ஆம் தேதி இந்தப் படம் வெளியானால் கூட தேர்தல் ஆணையத்திடமே புகார் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.


இந்நிலையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11 நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.