election-2019

img

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்

நடைபெறவிருக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை யும் அதனுடன் இணைந்த இதர பிரசுரங்களையும் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, நிலோத்பால் பாசு, ஹன்னன் முல்லா மற்றும் சுபாஷினி அலி ஆகியோர் வெளியிட்டார்கள். பின்னர் செய்தியாளர்களிடையே தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:கடந்த ஐந்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் கொடூரமான பேரழிவினை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் நம் நாட்டின் மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பினையே அழித்து ஒழித்திடும் விதத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயை மிகவும் கூர்மையான முறையில் விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் கீழான அமைப்புகள் மீதான தாக்குதல்களையும் சற்றும் நாணமற்ற முறையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சியில் தொடர்வதென்பது, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களை அரித்து வீழ்த்திடும். எனவே, வாக்காளர்கள் முன் உள்ள பிரதான பணி என்பது, இந்த கேடுகெட்ட பாஜக அரசாங்கத்தைத் தூக்கி எறிவது என்பதேயாகும்.


அந்த இடத்தில் நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கக்கூடியவிதத்தில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமர்த்திடுவதற்கு ஏற்ற விதத்தில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். இதற்கு, தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் கொள்கைகளில் இருந்து மாறி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றிடும் அரசு அவசியம். அத்தகைய கொள்கைகளைப் பின்பற்றிட ஆட்சியாளர்களை நிர்ப்பந்தப்படுத்திட, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில முக்கியமான உறுதிமொழிகளை இத் தேர்தல் 

அறிக்கையின் மூலம் மக்களுக்கு அளித்திருக்கிறோம்.


அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்திட உறுதி யேற்றுள்ளோம். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திடுவோம்.


தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 18 ஆயிரம் ரூபாய் அளித்திடுவோம். மேலும் அதனை நுகர்வோர் குறியீட்டெண் அட்டவணையுடன் இணைத்திடுவோம்.


நாட்டிலுள்ள அனைவருக்கும் பொது விநியோக முறையை அமல்படுத்திடுவோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் அல்லது தனிநபர் ஒருவருக்கு 7 கிலோ 

கிராம் உணவு தானியங்கள் அதிகபட்சம் கிலோ 2 ரூபாய் என்ற விலையில் அளித்திடுவோம்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச பொது சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்திடுவோம். பொதுச் செலவினத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் ஒதுக்கிடுவோம். தனியார்

இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவோம்.


பெண்களுக்கு நாடாளுமன்றம்-சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திடுவோம்.


பொதுக் கல்வி முறையை விரிவாக்கிடுவோம். பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மேலும் தரமானவைகளாக உயர்த்திடுவோம். பொதுச் செலவினத்தில் கல்விக்கு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கிடுவோம்.


வேலை உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையாகும். வேலையில்லாதவர் களுக்கு வேலையின்மைத் தொகை அளித்திடுவோம்.


மூத்த குடிமக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் பாதி அல்லது 6 ஆயிரம் ரூபாய் – இதில் எதுஅதிகமோ அத்தொகை - ஓய்வூதியமாக மாதந் தோறும் அளித்திடுவோம்.


பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதைத் தடுத்திடுவோம். கேந்திரமான தொழில்களான பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள தனியார்மயத்தை மீண்டும் பொதுத்துறைக்கு கொண்டு செல்வோம்.


தனியார் நிறுவனங்களிலும் தலித் - பழங்குடியின ருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம்.


தேர்தல் முறையில் சீர்திருத்தத்தை அமல் படுத்திடுவோம். மொத்த நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிப் பேரை கட்சியின் அடிப்படையிலும் மீதமுள்ளவர்களைத் தற்போதுள்ளது போல் வாக்காளர்கள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கும் அமைப்புமுறையைக் கொண்டு வருவோம். தேர்தல் பத்திரங்கள் அளிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்.


இவ்வாறு முக்கியமான அம்சங்களை எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சிபிஎம் தேர்தல் அறிக்கையானது ஆங்கிலத்தில் அச்சிலும் அதே சமயத்தில் ஒலிநாடாவிலும் வெளியிடப்பட்டது. அரசியல் கட்சிகளில் இவ்வாறு வெளியிடப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாகும். இவ்விரண்டையும் கட்சியின் இணையப் பக்கத்தில் காண முடியும். 


 (ந.நி.)