செவ்வாய், ஜனவரி 26, 2021

election-2019

சக்தியின் வாக்கு!!

மூன்று வருடங்களுக்கு முன்புதான் சக்தியை முதன்முதலாக சந்தித்தேன். அவன் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வெளி உலகம் சார்ந்த எந்தவிதமான விஷயங்களையும் கவனிக்காதவன். பள்ளியில் நாங்கள் அரசியல் பேசும் போதெல்லாம் அவன் ஒதுங்கியே இருப்பான். மருத்துவராக வேண்டும் என்று பெருங்கனவு அவனது நெஞ்சில் குடிகொண்டிருந்தது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல கட்-ஆப் பெற்றான். ஆனால் அந்த வருடம் தான் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நல்ல ௧ட்-ஆப் இருந்தும் தன் கனவான மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாமல் கடைசியில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். தன் கனவு சாம்பலாகி விட்டதாக சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பான். நானும் ஆறுதல் சொல்லுவேன். ஆனால் அதற்குப் பிறகு அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தான். அரசியல் என்றாலே ஒதுங்கி இருந்தவன் இப்போது தீவிரமாக அரசியல் பேசுகிறான். 


இன்று (18.4.19) காலை அவனை சந்தித்தேன். 

“என்ன மச்சான் சென்னையில் இருந்து வந்திருக்க?”

“ஓட்டு போட தான்டா”

“டேய் சூப்பர்டா.. ஓட்டு போட்டுட்டியா?”

“சரியாக போட்டுட்டேன் மச்சா...”


சூழ்நிலைகள் ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளுகிறது என்பதன் எளிய உதாரணம் இது. இந்த தேர்தலில் இது போன்ற கோடிக்கணக்கான சக்திகள் நாடு முழுவதும் வாக்களிக்கிறார்கள். தங்கள் கனவை சிதைத்தவர்களுக்கு எதிராக கேள்வி கேட்கிறார்௧ள். ஜனநாயகத்தின் வலிமையும் அதுதான். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.


அபிஜித்.

;