election-2019

புதிய பென்சன் திட்டத்தை ஒழிக்க முடியும்

வாஜ்பாய் அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 19 லட்சத்து 77 ஆயிரத்து 490 மத்திய அரசு ஊழியர்களும் 42 லட்சத்து 69 ஆயிரத்து 446 மாநில அரசு ஊழியர்களும் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். ஆனால் புதிய பென்சன் திட்டத்தை மத்திய மாநில அரசு ஊழியர்கள் எதிர்க்கிறார்கள். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழையபென்சனை அமல்படுத்தவேண்டும் என்பது தான் அவர்களது ஒரே கோரிக்கை. புதிய பென்சன்திட்டம் உத்தரவாதமான திட்டம் அல்ல. ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம் பங்குச்சந்தையில் போடப்படும். அது சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தது. அசலே பறிபோகலாம். பென்சன் கிடைக்காது. அதுமட்டு மல்ல அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ள பென்சனும் மூத்த குடிமக்களுக்கு வாழ்க்கையை நடத்த போதுமானது அல்ல. பழைய பென்சனுக்கும் சமமானது அல்ல.


உதாரணமாக ரூ.46ஆயிரம் சம்பளம் பெற்ற ஒருவர் பழைய பென்சனில் 10 ஆண்டு பணி முடித்து ஓய்வுபெற்றால் ரூ.23ஆயிரம் பென்சன் கிடைக்கும். புதிய பென்சனில் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்த தொகையில் 60 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 40 விழுக்காட்டை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். உங்கள் பணம் 40 சதவீதம் ரூ.5 லட்சம் என்றால் ஒரு லட்சத்துக்கு 524 தான். 5லட்சத்துக்கு ரூ.2620 தான் பென்சன் கிடைக்கும். ரூ.23000 கிடைக்காது. அவர்கள் சொன்னதும் உத்தரவாதமல்ல என்பதால் தான் அனைவரும் புதிய பென்சன்திட்டத்தை எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில், புதிய பென்சன் திட்டத்தையும் பி.எப்.ஆர்.டி.ஏ சட்டத்தையும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதுசாத்தியமே. திமுக தேர்தல் அறிக்கையில் மத்திய மாநில அரசு ஊழி யர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் 3 மாநில அரசுகள் இருந்தபோது புதிய பென்சன் திட்டத்தை தடுத்துநிறுத்தி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தினர். கேரளாவில் காங்கிரஸ் அரசு வந்தவுடன் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி னார்கள். திரிபுராவில் 2018ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 2018 முதல் புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்த தொடங்கிவிட்டனர்.மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் அரசாங்கத்தில் இல்லை என்றாலும் இன்னும் மம்தா அரசாங்கத்தால் புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தமுடியவில்லை. அமல்படுத்தினால் கடும் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியிருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். எனவே வரும் மக்களவைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் அவர்களுடைய கூட்டணி கட்சிகளையும் மக்கள் தேர்ந்தெடுத்தால் புதிய பென்சன் திட்டத்தை ஒழித்துக்கட்டிவிடமுடியும்.


ஆர்.இளங்கோவன்