election-2019

img

பட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...

“பட்டம் போல் அவர் பளபளப்பார்நூல் போல் இவரோ இளைத்திருப் பார்”  -என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) சமீபத்தில் வெளியிட்ட  அறிக்கையில் ‘இந்த நிதியாண்டின் நடப்பு  காலாண்டில்பெரும் முதலாளிகளின் கம்பெனிகள் ரூ.1.33 லட்சம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன எனதெரிவிக்கிறது.பொது முடக்கக் காலத்தில் கூட பெருமுதலாளிகளின் லாபம் குறையவில்லை. ‘மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 1897 கம்பெனிகளில் ஜூனில் முடிந்த 2020 காலாண்டின் முடிவில் 27 சதவீத வருமான வீழ்ச்சியையும் செப்டம்பர் காலாண்டில் 6 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவிக்கிறது.’ இருப்பி னும் லாபம் குறையவில்லை.

தனியார் கம்பெனிகள் பொதுமுடக்கக் காலத்தில் தங்களின் செலவினங்களை பெருமளவு வெட்டிச் சுருக்கியதே லாபத்திற்கான காரணம். தொழிலாளர்களை வேலையை விட்டு  வீட்டுக்கு அனுப்பியது, பெருமளவு பணிகளை குறைந்த கூலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றியது, மூலப்பொருட்கள் பயன்பாடு, இருப்பு வைத்துக் கொள்வதில் உள்ள செலவினங்களை குறைத்துக் கொண்டது ஆகியவையும் காரணம். ‘இவை இரண்டும் தனியார் கம்பெனிகள் லாப பெருக்கத்திற்கு காரணிகளாக உள்ளன.’மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கையினால் பெரு முதலாளிகள்  கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து பெரும் லாபம் பெற்று வருகிறார்கள். ஜுன் 2020 காலாண்டில் ரூ. 44.1 ஆயிரம் கோடி, மார்ச் 2020 ல் ரூ.32ஆயிரம் கோடி லாபம். கடந்த நான்கு காலாண்டுகளில் மட்டும் சராசரியாக ரூ. 50.2 ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன. இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ள சூழலில் பொது முடக்கக் காலத்தில் கூட தனியார் கம்பெனிகள் லாபம் பெற்றுள்ளன.
தனியார் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள், சாதாரண ஏழை மக்கள் பொதுமுடக்கத்தினால் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்களின் வருமான இழப்பால் குடும்பச் செலவுகளை குறைத்து பட்டினிகிடக்கிறார்கள். வேலை இழப்புக்கு உள்ளான தொழிலாளர் களுக்கு தனியார் கம்பெனிகள் எந்த இழப்பீடும்தரவில்லை. அரசின் நிவாரணமும் கிடைக்கவில்லை. ‘இப்படி தொழிலாளர்களின் வாழ்நிலை கடும் பாதிப்பில் இருக்கும் போது மிகப்பெரிய முதலாளிகளின் சொத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.’இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும்உள்ள 1சதவீத பணக்காரர்கள் பொருளாதார நெருக்கடி, பொதுமுடக்கம், உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்றவற்றால்  பாதிக்கப்படவேயில்லை. சுவிஸ் வங்கி அறிக்கையின்படி ஏப்ரல் -ஜுன்2020 இடைப்பட்ட காலத்தில் உலக பணக்காரர் களின் சொத்து 27.5சதவீத அதாவது 10.2 டிரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 2189 ஆக உயர்ந்திருக்கிறது.

பொதுமுடக்கக் காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி பங்குச்சந்தையில் சூதாடியதே இதற்கு காரணம். “அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் போன்றநெருக்கடிகள் எதுவானாலும் பணக்காரர் களுக்கு வாய்ப்புகளை தந்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது” எனக் கூறுகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக்.மேலும் “மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது”  என்கிறார்.

யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் ஏப்ரல் - ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது அதாவது 423  பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக் கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள் ளது.பெருமுதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் “செல்வங்களைஉருவாக்குபவர்கள்”(Wealth creators) என பிரதமர் மோடி உட்பட பலர்பேசுகிறார்கள். இவர்கள்தான் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள். இவர்களுக்கு சலுகைகள் வழங்குவதின் மூலம் ஏழை மக்களுக்கும் அந்த பயன் சென்றடைகிறது என்கிறார்கள். குதிரைக்கு ஓட்ஸ் கொடுத்தால் அது போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தி தின்று பசியாறலாம் என்பது “டிரிக்கிள் டவுன் கோட்பாடு” (trickle downtheory) ஆகும்.  இது ஆளும் வர்க்கத்தின் கடைந்தெடுத்த பொய்யாகும்.‘ஆக்ஸ்பாம்’ அறிக்கையின்படி இந்தியாவின் 1சதவீத பணக்காரர்கள் நாட்டின் 43 சதவீதசொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். அடி நிலையிலுள்ள 50சதவீத மக்கள் 2.8சதவீத சொத்துக்களையே வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய பாரபட்சமாகும். கொரோனா வைரஸ் பரவலும் அதைத் தொடர்ந்து அமலான பொது முடக்கமும் சாதாரண உழைப்பாளிமக்களின் வாழ்க்கையைச் சிதைத்துள்ளது. இந்தியாவில் தங்களது  மாநிலங்களிலிருந்து  வேலைக்காக வெளியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திடீரென அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் கடும் அவதிக்குள்ளானதை நாடே அறியும்.

‘சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)’ வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வேலை நேரம் 5.6சதவீதம், இரண்டாவது காலாண்டில் 17.3 சதவீதம்,மூன்றாவதில் 12.1 சதவீதம் குறைந்துள்ளது என கூறுகிறது. மூன்றையும் சேர்த்து சராசரியாக 11.7 சதவீத வேலை நேரத்தை தொழி லாளர்கள் இழந்துள்ளனர்.’குறிப்பாக இந்தியாவில் முறையே 3.1சதவீத, 27.3 சதவீத ,18.2 சதவீத வேலைநேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இழந்துள்ள வேலை நேரத்தை ஊதியமாக கணக்கிட்டால் தொழிலாளர்கள் இழந்துள்ளதன் தீவிரம் புரியும். உலகம் முழுவதும் தொழிலாளர்கள் இழந்த வருமானம் 10.7சதவீதம். தெற்காசியாவில் முக்கியமாக இந்தியாவில் 16.2 சதவீத வருமானத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் பணக்காரர்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் தங்களது 60 சதவீத வருமானத்தை தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர்.

பணக்காரர்கள் தொழிலாளர்கள் இடையே உள்ள முரண்பாட்டை இந்த விபரங்கள்நமக்கு தெரிவிக்கின்றன. இந்த முரண்பாடுகளை எதிர்த்து உலகம் முழுவதும் உழைப்பாளிகள் போராடி வருகின்றனர். தொடர் போராட்டங் கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன.உழைப்பாளி மக்களுக்கு எதிரான பணக்காரர்களுக்கு ஆதரவான மத்திய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் நவம்பர் 26 வேலை நிறுத்தத்தையும் 200க்கும் மேற்பட்டவிவசாய அமைப்புகள் நடத்தும் இரண்டு நாள் தொடர் போராட்டத்தையும் ஆதரித்து வெற்றி பெற செய்வது தேச பக்தக் கடமையாகும்.

===ஆர். தர்மலிங்கம்===
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கூட்டமைப்பின் துணைத் தலைவர் 

;