இலக்கணம் கற்பதை இன்பமாக்கமுடியும்.அவ்வகையில் மாணவர்களுக்கு எளிதில் அதே நேரத்தில் சுவையாக இலக்கணத்தைக் கற்பிக்க சிந்திக்க வேண்டும் புதிய முறைகளைக் கையாள வேண்டும். அப்படி சிந்தித்ததின் விளைவுதான் நான் வகுப்பறையில் கையாண்ட ஒரு முறை.அலகிட்டு வாய்பாடு கூறல் என்னும் இலக்கணத்தை முதல்நாள் கற்பிக்கும்போது மாணவர்களிடம் குறில் நெடில் அறிதல் திறனில் சிக்கல் இருப்பதை அறிந்தேன்.ஒலித்துப் பார்த்துக் குறில் நெடில் அறிதல் என்பதிலும் குழப்பம் இருந்தது. சொல்லை எழுதிப் படிக்கச் சொல்லும்போது சரியாகப் படிப்பவர்கள் எழுத்தை எழுதிக் ”குறிலா? நெடிலா?” எனக் கேட்டபோது குறிலை நெடில் என்றும் நெடிலைக் குறில் என்றும் சொல்வதை அறிந்தேன். இப்படி ஏற்படும் பிழையை நீக்குவதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தேன்.அதன் விளைவாக ஒரு அருமையான சிந்தனை உதித்தது.அதாவது நடைமுறை வாழ்க்கையோடு பொருத்தி எழுத்து வடிவத்தில் குறிலையும் நெடிலையும் எளிதாகக் கண்டுபிடிப்பது. மாணவர்களிடம் ஒரு உரையாடலை நடத்தினேன். “மாணவர்களே உங்களிடம் சில வினாக்களைக் கேட்கப் போகிறேன்.அது பாடம் தொடர்பானது இல்லை.நீங்கள் பசுமாடு வாங்க சந்தைக்குப் போகிறீர்கள் அப்போது மாட்டிடம் எதையெல்லாம் பார்ப்பீர்கள்” என்றேன். ஒரு மாணவன் எழுந்து”ஐயா....நான்கு கால்களும் நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பேன்” என்றான். உடனே நான் “ஒரு எழுத்தில் கால் வாங்கியிருந்தால் அது நெடில்” என்றேன். அடுத்த மாணவன் “அய்யா இரண்டு கொம்பும் நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பேன்”என்றான். நான் “அப்படியா மகிழ்ச்சி எழுத்தில் இரட்டைக் கொம்பு இருந்தால் நெடில்”என்றேன். அப்போது ஒரு மாணவன் எழுந்து”அய்யா..சுழி பார்ப்பேன்”என்றான்.
“ஆஹா...ஆஹா அருமை” என்ற நான்” மேலே சுழித்திருந்தாலோ,கீழே சுழித்திருந்தாலோ,பக்கவாட்டில் சுழித்திருந்தாலோ நெடில் என்றேன். கடைசியாக ஒரு மாணவன் தயங்கிய படியே”அய்யா....வாலைப் பார்ப்பேன்”என்றான். சில மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். நான்” ஏன் சிரிக்கிறீர்கள்?இந்த மாணவன் அருமையாகச் சொல்லியிருக்கிறான்.பசுவின் வால் ஆட்டுவால் போல் இருந்தால் அழகாக இருக்குமா?அதுமட்டுமல்ல நம்மேலே ஈ அமர்ந்தால் கையால் விரட்டுவோம் இல்லையா?அதுபோல மாடு தன் வாலால் ஓட்டும். மாட்டுக்கு வால்தான் கை.எனவே, எழுத்தில் கை,ஙை என்ற வரிசையில் வரும் எழுத்துகள் அனைத்தும் நெடில்”என்றேன். அனைத்து மாணவர்கள் முகத்திலும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கடைசியாக ஒன்றைச் சொன்னேன் ள என்ற எழுத்து எந்தெந்த எழுத்துகளோடு சேர்ந்திருக்கிறதோ அதுவெல்லாம் நெடில்” என்று சொல்லிவிட்டு சில எடுத்துகாட்டுகளைச் சொன்னேன். உயிரெழுத்தில் ‘ஊகாரம்’ ‘ஔகாரம்’ நெடில்.அதுபோல ‘கௌ,ஙௌ’ வரிசை எழுத்துகள் எல்லாம் நெடில் என்றேன். மாணவர்கள் சிலபேர் உணர்ச்சிப் பெருக்கில் “அய்யா...!’ என்று துள்ளிக் குதித்தார்கள். “இருங்கள் இன்னும் கொஞ்சம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு “எழுத்துகளைக் குறிலா நெடிலா என்று நான் சொன்ன பசுவின் அடையாளங்களை வைத்துப் பார்க்கும்போது முழுமையாகப் பார்க்கவேண்டும். ஏனென்றால் ‘கொ’ என்ற எழுத்தில் உள்ள காலைப் பார்த்துவிட்டு நெடில் என்று சொல்லக்கூடாது.காரணம் முதலில் ஒற்றைக் கொம்பு இருக்கிறது.இரட்டைக் கொம்பு இருந்தால்தான் நெடில்.எனவே அதைக் குறில் என்று சொல்லவேண்டும்.அதுபோல ‘கௌ’ என்ற எழுத்தில் ஒற்றைக் கொம்பு இருப்பதால் அதைக் குறில் எனச் சொல்லக்கூடாது.காரணம் நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.ளகரம் எந்த எழுத்தோடு சேர்ந்து வருகிறதோ அதுவெல்லாம் நெடில் என்று.எனவே அது நெடில்” என்று சொல்லிவிட்டு அடுத்து கரும்பலகையில் எழுத்துகளை எழுதிக் குறிலா நெடிலா எனக்கேட்டேன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்த எழுத்தைப் பார்த்தே பிழையின்றிச் சொல்லி அசத்திவிட்டார்கள். மறுநாள் அலகிடுதலில் அடுத்தக் கட்டத்திற்குப் போனேன். அதுவும் சுவையானதுதான். பார்ப்போம்.