economics

img

வங்கிகள் தனியார்மயம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு... எதிர்பார்க்கும் அளவிற்கு முதலீடு வருமா? என மோடி அரசுக்குச் சந்தேகம்....

புதுதில்லி:
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை, ஒன்றிய பாஜக அரசானது, அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் கொள்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கூறி, வங்கிகளை இணைக்கும் முடிவை கடந்தாண்டு மோடி அரசு எடுத்தது. அதன்படி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்ப்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அவற்றையும் இணைத்து சதிபாதியாக குறைக்கும் திட்டத்தை மோடி அரசு வைத்துளளது- மேலும் இவ்வாறு உருவாகும் 6 முதல் 7 வங்கிகளிலும் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்கி விடுவதும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும். 

2021 பிப்ரவரியில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, “இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 7 பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்” என்று வெளிப்படையாகவே நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், “”ஐடிபிஐ வங்கியைத் தவிர, 2021-22 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இவ்வாறு, தனியார்மயமாக்கல் திட்டத்தில் மோடி அரசு உறுதியாக இருந்தபோதிலும், கொரோனா தொற்றுப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கும் முதலீடுகளைப் பெற முடியாது என்பதால் அதனை மோடி அரசு தற்போது ஒத்திவைத்துள்ளது.தனியார் மயமாக்கப்படும் காப்பீட்டு நிறுவனம் இதுதான்.. என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், தேசிய காப்பீடு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஒன்றாக அது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இவை தவிர, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பவன் ஹான்ஸ், பிஇஎம்எல், நீலாச்சல் இஸ்பட் நிகாம் ஆகியவற்றின் பங்குகளை நடப்பாண்டே விற்றுவிட வேண்டும் என்று மோடி அரசு தீவிரமாக உள்ளது. இதன்மூலம் 2021-22 நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதியைத் திரட்ட வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது.

;