economics

img

இன்று தொடங்கிய ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்...

இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் விகித நிர்ணயக் குழு திங்கள்கிழமை தனது மூன்று நாள் விவாதங்களைத் தொடங்கியது. அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு ஜூன் 8 புதன்கிழமை அன்று கொள்கைத் தீர்மானத்தை அறிவிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த இருநாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம், CRR விகிதம் மற்றும் பிற நாணய கொள்கை குறித்த முடிவுகளை எடுக்க உள்ளது. கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.40 சதவிகிதம் அதிகரித்து, 4.40 சதவிகிதமாக அறிவித்தது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. 

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரீடைல் பணவீக்கம் தான். ஏப்ரல் மாதம் 8 வருட உயர்வான 7.79 சதவிகிதத்தை எட்டியது. ஆனால் ஆர்பிஐயின் கடந்த வட்டி உயர்வு பணவீக்கம் அளவுகளைக் கணிசமாக குறைத்தது. 

ஆர்பிஜ கவர்னர் சக்திகாந்த் தாஸ் ஏற்கனவே வட்டி விகிதம் உயர்வு கட்டாயம் இருக்கும் என அறிவித்துள்ள வேளையில், இந்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.40 சதவிகிதம் உயர்த்திவிட்டு, ஆகஸ்ட் கூட்டத்தில் 0.35 சதவிகிதம் வரையில் உயர்த்தலாம் அல்லது அடுத்த வார கூட்டத்தில் 0.50 சதவிகிதமும், ஆகஸ்ட் கூட்டத்தில் 0.25 சதவிகிதமும் உயர்த்தப்படலாம் என சந்தை கணிப்புகள் கூறுகிறது. 

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகள் வட்டியை உயர்த்த முடிவு செய்திருக்கும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு மிகவும் முக்கியமாக உள்ளது.