economics

img

ஊரடங்குகளால் ஒரே மாதத்தில் 75 லட்சம் வேலைகள் இழப்பு.. ஏப்ரலில் வேலையின்மை 7.9 சதவிகிதத்தை தொட்டது..... பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சம் பேர்கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும், 3 ஆயிரம் பேர் உயிரிழப்பதும் பெருந்துயரமாக மாறியுள்ளது.மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை வசதி, தடுப்பூசி, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மயானங்களிலும் எரிக்க முடியாத அளவிற்குபிணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முழு முடக்கம் அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இது தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, லட்சக்கணக்கில் வேலையிழப்புகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தங்கிப் பணியாற்றிவந்த வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குப் பின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து 6 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்து வந்தது.இந்நிலையில், மார்ச் மாதத்தில் 6.5 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 7.97 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE)தனது ஆய்வறிக்கையில் தெரிவித் துள்ளது.

இந்த வேலைவாய்ப்பின்மை விகிதமானது, கடந்த 4 மாதத்தில் இல்லாத உயர்வு என்றும், நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள பொருளாதாரக் கண்காணிப்பு மையம்,நகர்ப்புறங்கள் அளவில் இந்த வேலையின்மை  9.78 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 7.13 சதவிகிதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றுதொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உயிர் காக்கும் பணிகளும், சேவைகளும் மட்டுமே தற்போது பிரதானமாக விளங்குகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்கப்படாத முழுமுடக்கம் நிலவுகிறது. இதுவே மீண்டும் வேலைவாய்ப்பின்மையை நோக்கி நாட்டைத்தள்ளியிருக்கிறது. இந்த நிலை மே மாதமும் தொடரும் என்று பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.