கச்சா எண்ணெய் விலையானது உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
இது எரிபொருட்கள் விலை சர்வதேச அளவில் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகள் மிக மோசமான பணவீக்க விகிதத்தினை எட்டி வருவதால், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல நாடுகளின் கரன்சி மதிப்பானது மிக மோசமான சரிவினைக் எட்டியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று காலை அமர்விலேயே கச்சா எண்ணெய் விலையானது கடுமையான உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 1 சதவிகிதம் அதிகரித்து, 119.83 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 120.64 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.
சவுதி அரேபியா ஜூலை மாதத்திலிருந்து கச்சா எண்ணெய் விலையினை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. சவுதி அதன் அதிகாரப்பூர்வ விலையை ஆசிய நாடுகளுக்கு 6.50 டாலர்கள் அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 4.40 டாலர் பிரீமியமாக உள்ளது என அராம்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தற்போது கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ள நாடுகளில் கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. எனினும் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை காரணமாக சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது.
சவுதியின் இந்த முடிவால், இந்தியாக்கு பிரச்சனையா என்றால் நிச்சயம் பிரச்சனையே, ஒன்று சவுதியிடம் இருந்து இந்தியா கணிசமாக எண்ணெய் வாங்கி வருகின்றது. இரண்டாவது சவுதியினை தொடர்ந்து மற்ற நாடுகளும் விலையை அதிகரிக்க முற்படலாம். இதன் காரணமாக அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் அதன் தாக்கம் இருக்கலாம். இதனால் இந்தியாவில் பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம். பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்படுலாம்.